பஞ்சு மெத்தை.. மசாஜ் மெஷின்.. நகரும் சொகுசு ஹோட்டல்ல ஒரு ஆன்மீக டூர்! ஐஆர்சிடிசி-யின் வேற லெவல் அறிவிப்பு!

25 சதவீதப் பணத்தை மட்டும் கட்டிவிட்டுத் தங்களது இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். மீதிப் பணத்தைத் தவணை முறையிலும் ..
பஞ்சு மெத்தை.. மசாஜ் மெஷின்.. நகரும் சொகுசு ஹோட்டல்ல ஒரு ஆன்மீக டூர்! ஐஆர்சிடிசி-யின் வேற லெவல் அறிவிப்பு!
Published on
Updated on
2 min read

ஆன்மீகப் பயணங்களை விரும்புபவர்களுக்காக இந்திய ரயில்வே ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' என்ற பெயரில், பகவான் ராமர் மற்றும் அன்னை சீதையின் வாழ்க்கையோடு தொடர்புடைய புனித இடங்களை இணைக்கும் வகையில் ஒரு மெகா ரயில் பயணத்தை ஐஆர்சிடிசி (IRCTC) திட்டமிட்டுள்ளது. இந்த 17 நாட்கள் கொண்ட ஆன்மீகச் சுற்றுப்பயணம் வரும் மார்ச் 30-ஆம் தேதி டெல்லியின் சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது. சுமார் 7,560 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் இந்தப் பயணம், இந்தியாவின் பல மாநிலங்களைத் தாண்டி நேபாளம் வரை செல்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சமே.

இந்தப் பயணத்திற்காக 'பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி' (Bharat Gaurav Deluxe AC) என்ற அதிநவீன சுற்றுலா ரயில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயிலை ஒரு 'நகரும் ஹோட்டல்' என்றே சொல்லலாம். இதில் இரண்டு நவீன உணவகங்கள், சென்சார் வசதி கொண்ட கழிவறைகள், ஷவர் வசதிகள், மற்றும் நீண்ட பயணத்தால் சோர்வடையும் பக்தர்களுக்காக 'ஃபுட் மசாஜர்' (Foot massagers) போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக ஒவ்வொரு கோச்சிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் செக்யூரிட்டி கார்டுகள் இருப்பார்கள்.

யாத்திரை எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று பார்த்தால், டெல்லியில் தொடங்கும் ரயில் முதலில் அயோத்திக்குச் செல்கிறது. அங்கே ராம ஜென்மபூமி கோவில், அனுமன் கர்ஹி போன்ற இடங்களைப் பார்த்த பிறகு, நந்திகிராம், சீதாமர்ஹி ஆகிய இடங்களுக்குப் பயணம் தொடர்கிறது. பீகாரின் சீதாமர்ஹியிலிருந்து பக்தர்கள் சாலை மார்க்கமாக நேபாளத்தின் ஜனக்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதைத் தொடர்ந்து பக்ஸர், வாரணாசி (காசி), பிரயாக்ராஜ், சித்திரகூடம், நாசிக், ஹம்பி வழியாக இறுதியில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வரை இந்த யாத்திரை நீடிக்கிறது.

கட்டண விவரங்களைப் பொறுத்தவரை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் கோச் வசதியைப் பொறுத்து விலை மாறுபடும். 3 ஏசி (3AC) வகுப்பில் ஒருவருக்கு சுமார் 1,11,630 ரூபாயும் (மூன்று பேர் பகிரும் அடிப்படையில்), 2 ஏசி (2AC) வகுப்பிற்கு 1,51,225 ரூபாயும், மற்றும் 1 ஏசி (1AC) வசதிக்கு 1,64,940 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்திலேயே ரயில் பயணம், தங்கும் ஹோட்டல் வசதி (3-ஸ்டார் ஹோட்டல்கள்), முழு சைவ உணவு, உள்ளூர் இடங்களைப் பார்க்க ஏசி பஸ் வசதி மற்றும் பயணக் காப்பீடு என அனைத்தும் அடங்கிவிடும்.

பக்தர்களுக்குச் சுமையை குறைக்க ஐஆர்சிடிசி ஒரு சூப்பர் வசதியையும் கொடுத்துள்ளது. மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் கட்ட முடியாதவர்கள், 25 சதவீதப் பணத்தை மட்டும் கட்டிவிட்டுத் தங்களது இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். மீதிப் பணத்தைத் தவணை முறையிலும் (EMI) கட்டும் வசதி உள்ளது. டெல்லி மட்டுமின்றி காசியாபாத், அலிகார், கான்பூர், லக்னோ போன்ற ரயில் நிலையங்களிலும் பயணிகள் ரயிலில் ஏறிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com