கடன், நோய், பகை தீர்க்கும் பட்டீஸ்வரம் துர்க்கை! ராகு கால வழிபாட்டின் மகிமைகள் தெரியுமா?

ஐந்து கோபுரங்களைக் கொண்ட இப் பிரம்மாண்ட ஆலயம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடன், நோய், பகை தீர்க்கும் பட்டீஸ்வரம் துர்க்கை! ராகு கால வழிபாட்டின் மகிமைகள் தெரியுமா?
கடன், நோய், பகை தீர்க்கும் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் AI Image
Published on: 
Updated on: 
2 min read

கடன், நோய், பகை தீர்க்கும் பட்டீஸ்வரம் துர்க்கை

குடும்பத்தில் சூழ்ந்திருக்கும் இருள் நீக்கி, இல்லந்தோறும் குலவிளக்காய்ச் சுடர்விடும் தெய்வீகப் பேரொளியாம் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் திருக்கோயிலின் வியத்தகு அதிசயங்கள் பக்தர்களை வியக்க வைக்கின்றன

தமது இல்லங்களில் குழப்பம், கவலை, துன்பங்கள் நிறைந்து வேதனையில் வாடுபவர்கள், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை மனதார நினைத்து எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களில் முழு நம்பிக்கையாக உள்ளது

'சாந்த முகத்துக்காரி' என்று அன்போடு அழைக்கப்படும் அன்னை துர்க்கை அம்மன் ஆலயம், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் என்ற ஊரில், தேனுபுரீஸ்வரர் எனும் சிவாலயத்தில் தனிப்பெருமையோடு அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறாள் அன்னை துர்க்கை

மாமன்னன் ஆதித்த கரிகாலச் சோழனின் குலதெய்வமாகவும், சோழப் பேரரசின் அரண்மனைத் தெய்வமாகவும் போற்றப்பட்ட இத்தேவி, பிற்காலத்தில் இத்திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டாள் என்கிறது தல வரளாறு

பொதுவாகச் சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் தேவகோஷ்டத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை துர்க்கை, இப்பட்டீஸ்வரம் திருக்கோவிலிலோ தனிச்சன்னதி கொண்டு பேரழகுடன் வீற்றிருக்கிறாள். முக்கண்களும் எண்கரங்களும் கொண்டு, மகிஷாசுரனின் தலை மீது திருவடி பதித்து நின்ற கோலத்தில் அவள் காட்சி தரும் ஒய்யாரமே தனி அழகு.

திருக்கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் எனப் படைக்கலன்களைத் தாங்கியிருந்தாலும், உக்கிரம் தணிந்து, பொங்கும் கருணையோடு சாந்த சொரூபியாகத் தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அவள் அருள்பாலிக்கிறாள்.

ஐந்து கோபுரங்களைக் கொண்ட இப் பிரம்மாண்ட ஆலயம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. வேத காலத்தில் இத்தலத்தில் சிவலிங்கத்தினை வைத்து பார்வதி தேவி தவம் புரிந்தபோது, அவளுக்குத் துணையாக காமதேனுவின் மகளான 'பட்டி'யும் சிவலிங்கத்திற்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்தது. இதனால் ஆனந்தம் அடைந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியான சிவபெருமான், பார்வதி தேவிக்குச் சடாமுடியுடன் காட்சி அளித்ததோடு, பசுவான பட்டியின் பெயர் கொண்டு 'பட்டீஸ்வரனாக' இக்கோவிலில் வீற்றுள்ளார்.

பெரும் தவ வலிமை கொண்ட இத்தலத்தில் ராகுவும் கேதுவும் அம்பாளை அனுதினமும் வணங்கி வருவதாகவும், ஆதலால் ராகு காலத்தில் எவர் ஒருவர் துர்க்கையைப் பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கு ராகு பகவான் எந்தக் கெடுதல்களையும் செய்யாது நல்லதே செய்வார் என்பதும் ஐதீகமாக உள்ளது. அதுபோல செவ்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்குச் சிவப்பு பூக்களைப் போட்டுப் பூஜிப்பதால், இந்த துர்க்கைக்குச் சிவப்பு மாலை சாத்தி வேண்டிக்கொண்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சக்தி பூமியான இத்தலத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள பட்டீஸ்வரர், கேட்டவர்களுக்குக் கேட்டதைத் தருவதால் 'தேனுபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இத்திருக்கோயிலில் காணப்படும் மற்றொரு மாபெரும் அதிசயம், விலகி அமர்ந்திருக்கும் நந்தி தேவர் ஆகும், சிறுவயது திருஞானசம்பந்தர் தன்னை நேருக்கு நேர் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, ஈசன் தன் நந்தியை வழியை விட்டு விலகுமாறு ஆணையிட்டார். அந்தத் திருவிளையாடலுக்குச் சான்றாக, இக்கோயிலின் நுழைவாயிலிலும் கருவறை முன்பும் சிவலிங்கத்தை மறைக்காமல் ஒரு பக்கமாக ஒதுங்கி அமர்ந்திருக்கும் நந்தி தேவரை இன்றும் நாம் தரிசிக்கலாம்

இத்தலத்தில் பட்டீஸ்வரரையும், இங்குள்ள ஞானாம்பிகையையும் வணங்குவதன் மூலம் அனைவருடைய பூர்வ ஜென்ம பாவங்களும் மெல்ல மெல்ல மறைவதாகக் கூறப்படுகிறது.

இத்துர்க்கைத் தலத்தில் அம்மன் 'பல்வளைநாயகி', 'ஞானாம்பிகை' என்கிற பெயராலும் ஆராதிக்கப்படும் நிலையில், இங்குள்ள புனித கிணற்றுத் தண்ணீர் தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டு அம்மனை வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் மிகுந்த வரப்பிரசாதி என்பதால், நோயினால் பிடிக்கப்பட்டவர்களும், குடும்பத் துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் குறைகள் நீங்கி நலம் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் அம்மன் அருளால் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் எந்தவித இடையூறும் இல்லாமல் மிக எளிதாக வெற்றிகளைப் பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.