
ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் இவ்விழா உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அந்த தியாகத் தமிழனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் இங்கே சித்திரையில் கூத்தாண்டவர் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தும் கும்மாளத்தோடும் கண்ணீரும் செந்நீரோடும் அரங்கேறி அதிர வைக்கிறது இந்த கூத்தாண்டாவர் கோவில் திருவிழா
உலகின் மூளை முடுக்கில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் இங்கே சங்கமித்து ஒரு சரித்திர நிகழ்வை நடத்திக் காட்டுகின்றனர்
அப்படி கூத்தாண்டவர் திருவிழாவில் என்ன நடக்கிறது? அதன் சுவாரஸ்யமான பின்னணிகள் கேட்போரை பிரமிக்க வைக்கிறது பார்ப்போரை வியப்படையச் செய்கிறது
மகாபாரதத்தில் தர்மத்தை காப்பதற்காக தன் தலையை பலி கொடுத்த அரவான் என்பவனது கதை தான் இத்திருவிழாவின் முக்கிய கருவாக காட்டப்படுகிறது
திரௌபதியின் அறைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்த அர்ஜுனனுக்கு, ஒரு வருட காலம் வனவாச தண்டனை அளிக்கப்பட்டு அவன் தமிழகத்தை நோக்கி வருகிறார்.
அப்போது அவன் தங்கி இருக்கும் ஆற்றங்கரையோரம் பாம்புகள் சூழ்ந்த நாகலோகத்தில் இருந்த ஒரு நாககன்னிக்கும் அர்ஜுனனும் காதல் வயப்பட்டு அதனால் பிறந்த சர்வ லட்சணம் பொருந்திய குழந்தைதான அரவான் என்னும் ஆணழகன்.
மகாபாரதத்தில் குருசேத்திரப் போரில் தன் தந்தை அர்ஜுனன் வெல்வதற்காக தன் தலையை தானமாக கொடுத்தவன் தான் அரவான்.
தான் பலியாவுதற்கு முன் கிருஷ்ணனிடம் இரண்டு வரங்களை கேட்டார். அதில் தான் மணம் முடிந்து திருமண வாழ்க்கையில் ஒரு நாளேனும் ஈடுபட வேண்டும் என்றும் இரண்டாவதாக குருஷேத்திர போரை முழுவதுமாக காண வேண்டும் என்றும் கோரினான்.
அவனது ஆசைப்படியே கிருஷ்ணர் பெண்ணாக அவதாரம் எடுத்து , அரவானை திருமணம் முடித்ததும் . ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். இந்நிகழ்வே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மைய கருவாக ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவில் அரங்கேறுகிறது
மோகினியாய் தம்மை உணரும் திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவின் போது இரவு தாலி கட்டி அதிகாலை தாலியை அறுத்து விதவைக் கோலம் எடுக்கும் நிகழ்ச்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும் நிலையில். தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என அக்கிராமமே களைகட்டி காணப்பட்டது.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலிருந்தும் குவிந்திருக்கும் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சியின் போது தன்னை மணமகளாக அலங்கரித்து கூத்தாண்டவர் கோவில் பூசாரியை அரவாளனாக நினைத்து தாலி கட்டிக் கொள்கின்றனர்.
அன்று இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் காணப்படும் திருநங்கைகள் மறுநாள் நடக்கும் அரவான் பலிகள நிகழ்ச்சியின் போது ஒப்பாரி வைத்து அழுது, கட்டிய தாலியை அறுத்து, அலங்கார கோலங்களை அழித்து வெள்ளை புடவையில் விதவையாக காட்சித் தருகின்றனர். இதனைத் தொடர்ந்து.தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
இதிகாசங்களோடு இணைந்த இந்திய மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் இந்த திருவிழா, இன்று வரை சமூகத்தால் புறம் தள்ளப்படுகின்ற திருநங்கைகளின் தியாகத்தை எடுத்துக் கூறுவதாகவே நடத்தப்படுகிறது.
இக்கோவிலில் வீற்றிருக்கும் கூத்தாண்டவர் வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், இங்கு வழங்கப்படும் உரிமைச் சோற்றையும் படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்