தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் தாலுகாவில் படவேடு எனும் கிராமத்தில் வீற்றிருக்கும் புகழ்வாய்ந்த ரேணுகாம்பாள் கோவில் தொண்டை நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுவதோடு, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான பரசுராம முனிவரின் அவதார தலமாகவும் புனிதம் பெற்றுள்ளது.
மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
சக்தி வாய்ந்த இக்கோவிலில் அத்திமரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் காட்சித்தருவது உலகின் வேறேங்கும் காணமுடியாத ஒன்றாகும். கோவில் கருவறையில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்து, தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறது.
ரேணுகாதேவி அவர் பெற்ற பிள்ளையான பரசு ராமரால் தலை துண்டிக்கபட்டு பின்னர், அதே பரசுராமரால் உயிர்பெற்று எழுந்ததாகவும், அந்த ரேணுகாதேவியே இங்கு அம்மனாக கோவில் கொண்டு இருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது.
இந்த அம்மன் கோவிலில் குங்குமத்திற்கு பதிலாக தோண்டி எடுக்கப்பட்ட மணல் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் ஆனி-திருமஞ்சன நாளில் பிராசதத்திற்காக எடுக்கப்படும் மணல் மீண்டும் தானாகவே உருவாகுவதாகவும் சிவாச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர், இந்த புனிதமான மணல் பிரசாதம் வயிற்று வலியை குணப்படுத்தும் மருந்தாக நம்பப்படுகிறது.
பொதுவாக அம்மன் சன்னதிகளில் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும் நிலையில், இங்கு மட்டும் எருது வாகனமாக அமைந்துள்ளது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.
குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் தேவியின் திருவுருவம் ஏந்திய பொம்மை வடிவிலான தலையை சுமந்தபடி கோவிலை வலம் வந்து பிரார்த்தனை செய்வது இக்கோவிலில் மட்டுமே காணப்படக்கூடிய சிறப்பிற்குரிய பிரார்த்தனை ஆகும்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் தங்கி ரேணுகாதேவி அம்மனுக்கு சேவை செய்து தல தீர்த்தை உடலில் தெளித்துகொள்ள 5 நாட்களுக்குள் அம்மை நோய் குணமாகி விடுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆடி மாதம் ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் அம்மனுக்கு நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவிலான இந்த படவேடு அம்மன் கோயிலில், குகைகள் போன்ற பல பொக்கிஷங்கள் இருப்பதால், இக்கிராமம் முழுவதும் பயிர் சாகுபடி தவிர வேறு எவருக்கும் நிலத்தை தோண்ட தொல்லியல் துறையினர் அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வீடு கட்ட விரும்பும் எவரும் அஸ்திவாரங்களை தோண்டும்போது தொல்லியல் துறை அதிகாரிகள் உடனிருப்பது இன்றளவும் நடைபெற்று வருகிறது.
இந்து தேவியின் அவதாரமான ரேணுகாம்பாள் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு சென்று தெய்வீக தாயை வழிபடுபவர்களுக்கு ஆன்மீக ரீதியாக நிறைவை அளிப்பதாகவும் கருதப்படுகிறது. அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த புனித மண்ணில் வீற்றிருக்கும் அம்மனை வணங்கி வளம் பெறுவோம்.
மாலைமுரசு தொலைக்காட்சிக்காக செய்தியாளர் உடன் கலைமாமணி நந்தகுமார்....
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்