ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் பழமையான இந்த முருகன் கோயிலில் அமைந்துள்ள நாகர் சிலையை வணங்கி வழிபாடுகள் செய்தால் நாக தோஷங்கள் நீங்குவதோடு வாழ்வில் ஏற்பட்ட பல தடைகளும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
ஆண்டுதோறும் பல அதிசயங்கள் நிகழும் அந்த ஆலயம் ஈரோடு மாவட்டம் உதயகிரி என்னும் ஊரில் அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி என்ற பெயரோடு காட்சியளிக்கிறது
சிறு குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயிலின் கருவறையில் முத்துவேலாயுத சுவாமி, நின்ற கோலத்தில் வலது கையில் தண்டத்தை ஏந்தி, இடது கையை இடுப்பில் ஊன்றியபடி காட்சி தருவதோடு சுவாமி சன்னதியின் இருபுறமும் தெற்கே காசி விஸ்வநாதரும், வடக்கே விசாலாக்ஷியும், தாயும் தந்தையுமாக அருள் பாலிக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் அதிசய நிகழ்வாய் சித்திரை மாதத்தில் 13 14 15 ஆகிய தேதிகளில் முருகப்பெருமானின் மீது சூரிய ஒளி படர்ந்து ஆறுமுகனை தரிசனம் செய்கிறது. இதனால் உதயகிரி வேலாயுத சாமி என்று திருநாமத்துடன் இக்கோயிலில் குடிகொண்டு உள்ளார் குமரன் எனும் முருகன்
சிறிய குன்றில் அமைத்துள்ள இந்த கோயிலில் கருவறை, அர்த்த மண்டபங்கள், காணப்படுவதோடு திருக்குறள் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள தூண்கள், மேற்கூரைகளும் காலத்தால் அழியாமல் காட்சியளிக்கிறது.
பழமையான கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயிலின் பல சிற்பங்கள் கலை அழகோடு காணப்படுவதுடன் அக்னி, வாயு உள்ளிட்ட பஞ்சலிங்கங்கள் ஒரே மண்டபத்தில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு தனி சன்னதி கொண்டு 1008 லிங்கங்களுடன் காணப்படும் சகஸ்ரலிங்கம் சர்வ தெய்வாம்சத்துடன் வீற்றிருந்து பக்தர்களின் வினைகளை நீக்கி வாழ்வில் வெளிச்சம் தருகிறது.
முத்து வேலாயுத சுவாமியாக முருகர் அருள் பாலிக்கும் இந்த கோயிலில் ஐந்து தலை நாகம் சிவலிங்கத்தை சுற்றி படம் எடுப்பது போன்ற புடைப்பு சிற்பம் காணப்படுகிறது. இந்த கோயிலிலும், முருகருக்கு விசேஷமான நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது போல இந்த நாகர் சிலைக்கும் சிறப்பு வழிபாடு நடத்தி வேலாயுத சாமியை வணங்கினால் நாகதோஷம் நீங்கிவிடுவதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கொங்கு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு விஜயநகர காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட இந்த முருகன் ஆலயத்தில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் ஆகிய அனைத்து முக்கிய பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
பாறைக்கற்கள் கொண்டு கட்டப்படுள்ள இக்கோயில் பழமையான கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதோடு இங்கு காலபைரவர் தனி சன்னதியிலும், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், லிங்கோத்பவர் ஆகியோர்கள் தனி சனன்திகளும் வீற்றிருந்து அருள் வழங்கி வருகின்றனர்.
கடுமையான வெயில் காலங்களிலும் வற்றாத தாமரை மலர்களோடு காணப்படும் இத்தலதீர்த்தத்தில் நீராடி, வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இட்டு முருகப்பெருமானை வழிபட்டால் தோல் வியாதிகள் நீங்குவதோடு சகல பொருளாதார கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம் என பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்
இத்தலத்தில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாத்தி, 108 தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடைகள் நீங்குவதோடு கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சமான வாழ்வு வாழலாம் என ஆறுமுகனை வழிபடுவோர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக கோபிச்செட்டிபாளையம் செய்தியாளர் சுப்ரமணியத்துடன் கலைமாமணி நந்தகுமார்..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்