அன்பு நேயர்களே…..உங்களின் இதயம் கவர்ந்த பகுதிக்கு அழைக்கிறோம். அற்புத திருக்கோயில்களில் நடக்கும் ஆச்சர்யமான நிகழ்வுகளை விழிகளுக்கு முன்னால் படைக்கிறோம்.
அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும், சக்தி தேவியின் பரிபூரண அருள் நிறைந்த ஆலயத்தில் நடப்பது என்ன?
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பாரத போரிலே வெற்றி பெற பஞ்சபாண்டவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிப்பட்டது ஏன்?
நினைத்த காரியங்கள் வெற்றியடைவதற்காக நடத்தும் சக்தி வாய்ந்த யாகம் எங்கே நடக்கிறது?
யாகத் தீயின் போது நடக்கும் அதிசயம் தான் என்ன?
ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான மக்களை பிரமிக்கவைக்கும் அந்த பரவச நிகழ்ச்சி எங்கே எப்படி நடக்கிறது?
வருங்கள் நேயர்களே…..
ஒரு பரவச பக்தி பயணத்திற்கு அழைத்துச் செல்கிறோம்
மனிதனுக்கு நாவில் ஒரு மிளகாய் பட்டாலே கண்களில் கண்ணீர் பெருகி நாசித்துவாரங்களில் நீர் வழியும்.
உணவு சமைக்கும் போது ஒரு மிளாய் கூடுதல் ஆனாலே கார நெடி தலைக்கேறி கண்டபடி தும்ம ஆரம்பிபோம்.
இது இயல்புதான் என்றாலும் இதையும் மீறி ஆயிரம் மிளகாயை அள்ளி போட்டாலும் அருகில் இருக்கும் நமக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால் நம்ப முடிகிறதா நேயர்களே…
அக்னியில் ஆயிரக்கணக்கான மிளாகாய்கள் அர்பணிக்கப்பட்டு அர்ஜிக்கப்படும்போது ஆலயத்தில் நிரம்பி நிற்கும் பக்தர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை .இது சாத்தியமா என்றால் சத்தியமாக ஒரு சக்திக்கு கட்டுப்பட்டு இது நடக்கிறது என்றுதான் நம்பத்தோன்றுகிறது.
இந்த அதிசயம் எங்கு நடக்கிறது என்று அறிய ஆசை வருகிறதா? வாருங்கள் வற்றாத நதி போல அருளை வாரி வழங்கும் அம்மன் கோயிலுக்கு செல்வோம், அம்மாவாசையன்று அங்கு நடக்கும் அறிவியலுக்கு எட்டாத அற்புதத்தை காண்போம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் ஐவர்பாடி என்று பெயர் பெற்றிருந்த ஒரு கிராமம் தற்போது அய்யாவாடி என்றழைக்கப்படுகிறது. இங்கு தான் ஆயிரக்கணக்கான அண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிகும்பலா வேள்விக்கு தலைவியாய் விளங்குகிறாள் பிரித்யங்கர தேவி
சக்தியின் உக்கிரமான வடிவம் தான் மஹா பிரத்யங்கரா தேவி. நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் இங்கு தேவி காட்சி தருகிறாள்.அந்த தேவிக்கு இங்கு கோயில் கட்டி அய்யாவாடி மக்கள் பூஜை செய்து வணங்கி வருகிறார்கள்.
இந்தக்கோவிலின்தொன்மையைப்பற்றியும், பழமையைப்பற்றியும், வழிவழியாக பலவிஷயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.பஞ்சபாண்டவர்கள் தேசத்தை இழந்து, அவமானத்தை சந்தித்து, துக்கமும் வேதனையும் பொங்க, அலைந்தார்கள். இறுதியாக இந்த கோயிலில் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தந்த பிரத்தியங்கராதேவி கண்டு பூரித்தவர்கள் இங்கு அமைந்திருந்த ஆலமர இலைகளை கொண்டு அர்ச்சித்து வழிபட்டு இழந்ததையெல்லாம் அடைந்தார்கள். பஞ்ச பாண்டவர்கள். ஐவர் வந்து பூஜித்ததால், இந்தத் தலத்துக்கு ஐவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஐயாவாடி என அழைக்கப்பட்டு வருகிறது.இங்கே உள்ள பிரத்தியங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவள். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவள். மாதந்தோறும் அமாவாசை தினத்தின் போது சிறப்பு ஹோமங்களும் நடைபெறுகின்றன. இந்தரஜித் இராவணனுக்குத் துணையாக தேவர்களை அடக்க நிகும்பலை இந்த ஆலயத்தில் யாகம் செய்ததாக கூறப்படுகிறது. எட்டு திக்கும் மயானம் சூழ்ந்த இந்த கோயிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் நடக்கும் ஹோமத்தின் உச்சகட்டமாகதான் அதிசயமாக உள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் சூழ்ந்திருக்க, சிவாச்சாரியார்கல் வேதமந்திரங்கள் ஒலிக்க இந்த சக்தி வாய்ந்த யாகத்தில் வடமிளகாயை அம்பாளுக்கு நிவேதனம் செய்வார்கள். கூடைகூடையாய் மிளகாயைக் கொட்டுவார்கள். ஆனாலும் ஒரு சிறுகமறல் கூட அங்கு எழாது. சகலமும் தேவி உள்வாங்கிக் கொண்டு விடுகிறாள் என்றுஇன்றளவும் நம்பப்படுகிறது. அது தான் இன்றும் அறிவுக்கு எட்டாத அதிசயமாக விளக்குகிறது.
இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பிரத்தியங்கிரா தேவியை மனதார வேண்டிக்கொண்டால், ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளும் விலகும். எதிரிகளும் வலுவிழப்பார்கள் என்பதால் இங்கு யாகம் நடக்கும்போதும் பல்லாயிரக்காண பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தேவியை வணங்கி வருகின்றனர். இதை வாழ்வில் அனுபவ பூர்வமாக கண்டவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் எடுத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தந்தருளுவாள் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி என்று அம்மன் பக்தர்கள் ஆணித்தரமாக சொல்கின்றனர்.