
தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் வேல் குத்தியும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், திருப்பரங்குன்றம் பகுதியை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில்,
அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக நடந்து வந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பொது தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கடற்கரையில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கடற்கரை பாதுகாப்பு குழுவினரும் மீட்பு குழுவினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
முருகக் கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படைவீடு கோவிலான கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மூலவர் வெள்ளி கவசம் மற்றும் வைரவேலுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
முருகப்பெருமானின் பிரசித்திபெற்ற ஐந்தாம் படைவீடு கோவிலான திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து, உடலில் அலகு குத்திக்கொண்டு சுமார் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், உற்சவர் சண்முகப் பெருமான், உற்சவர் முருகப்பெருமான் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்...
முருகப்பெருமானின் ஆறாம் படைவீடான மதுரை அருகே உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், நெய் விளக்கேற்றியும், காவடி எடுத்தும் முருக பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.