காடுகளும் மலைகளும் நிறைந்த அந்த வனப்பகுதியில் நில ஒளி வீசும் பௌர்ணமி நாளில் பஞ்ச பூதங்களையும் வென்ற அனுமன் கிரிவலம் வருவதாகவும், அன்று மலையை வலம் வரும் பக்தர்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெருவதாகவும் கூறப்படுகிறது.
புதிய செங்கல்லில் ராம ஜெயம் எழுதி தலையில் சுமந்து இந்தக் கோவிலில் உள்ள 108 படிகளை கடந்து குன்றின் மீது குடிகொண்டிருக்கும் தெய்வத்தை வழிபட்டால், சொந்த வீடு கட்டும் பாக்கியம் கண்டிப்பாக கிடைப்பதாக கூறப்படும் கோவிலைப் பற்றியும், அங்கு தெய்வமே கிரிவலம் வரும் அதிசயத்தை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் அமைந்துள்ள கஜகிரி மலை.. இந்த கோவிலில் தான் நிலவொளியில் ஒரு தெய்வீக நடையிடும் வீர ஆஞ்சநேயர் வீற்றிருந்து பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தந்தருளுகிறார்.
சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் அழகிய சோலையின் நடுவே கோவில் கொண்டிருக்கும் இந்த ஆஞ்சநேயரை வழிபட்ட பலர் பிரபலங்களாக புகழின் உச்சிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்மிக அதிர்வலைகளை உணர வைத்து, மனதிற்கு அமைதியை தரும் இந்த கோவில் உள்ள வீர ஆஞ்சநேயரை, முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வேண்டுகோளை ஏற்று மகான் வியாச ராஜ தீர்த்தன் என்பவர் பிரதிஷ்டை செய்து வைத்ததாக ஸ்தல வரலாறுகள் கூறுகின்றன.
சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனைப் பற்றியும், அவரது பராக்கிரமங்களைப் பற்றியும் இந்தக் கோவிலின் ஸ்தல புராணங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.
ராமாயண யுத்தத்தின்போது ராவணனின் மைந்தன் இந்திரஜித், பலம் பொருந்திய வில்லினை எய்ததினால் லட்சுமணன் மற்றும் வானரப் படை வீரர்கள் பலர் மூர்ச்சையாகிப் போனார்கள். அவர்களை மீட்பதற்காக ராமபிரானின் கட்டளைக்கு இணங்க சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார் அனுமன்.
கையில் சஞ்சீவி மலையை ஏந்தி வந்த அனுமன் தமது கடமையான மாலை நேர பூஜைக்காக கஜகிரி மலைப் பகுதியில் இறங்கி இறைவனை வழிபட்டார். அப்போது அனுமனின் பாதம் படிந்த இடத்தில் வீரா ஆஞ்சநேயரின் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டு திருமங்கை ஆழ்வாரால் கோவில் எழுப்பப்பட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
இந்த வீர ஆஞ்சநேயர், பஞ்சபூதங்களில் ஒன்றான சமுத்திரத்தைத் தாண்டியவர், நிலத்தில் உக்கிரமாய் போர் புரிந்து ராவணனின் படைகளை வென்றவர், நெருப்பால் இலங்கையை எரித்தவர்.
அப்படிபட்ட வீர தீர வாயு புத்திரனைக்காண, முதலில் மலையடிவாரத்தில், கோவில் கொண்டிருக்கும் ஆனைமுகனை வணங்கி அதன் அருகே உள்ள நவகிரகங்களை தரிசித்த பின் 108 படிகளை தாண்டி மேலே சென்று அங்கே ஆறடி உயர அழகு சிலையாக காணமுடிகிறது.
சாளக்கிராமத்தால் ஆனவர் இந்த வீர ஆஞ்சநேயரின் எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் ஒளிவிட்டு அருள் மழை வழங்கி வரும் நிலையில் அங்கும் ராமரின் பாதத்திற்கு கிழும் அமர்ந்த நிலையில் அனுமன் காட்சி தருகிறார்.
சகல தோஷங்களையும் கஷ்டங்களையும் துடைத்தெறியும் இந்த வீர ஆஞ்சநேயர், தனது வலது திருப்பாதத்தை தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் உயர்த்தி பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் காணப்படுவதோடு அவரது நாபிக் கமலத்தில் தாமரையும், வாலில் மணியுடனும் பக்தர்களுக்கு அபயம் தந்து அருள்கிறார்.
கோவில் பிரகாரத்தில் கருவறையைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகள் அழகிய சித்திரங்களாக செதுக்கப்பட்டு அதில் சேது பாலம் அமைப்பது போன்றும், ஆஞ்சநேயர் சூரியனைப் பழம் என்று கருதிப் பிடிக்கச் செல்வது போன்றும், சிவபெருமானின் உடம்பு முழுவதும் ஆக்கிரமித்தருளும் ஆஞ்சநேயர் சிற்பங்களும் உயிரோட்டமாக செதுக்கப்பட்டுள்ளன.
வியாச தீர்த்தர் அனுமனுக்கு 108 கோவில்களை கட்டி வழிபட்டதாகவும்,அதில் இங்கு அனுமனுக்கு கோவில் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அவர் கட்டிய 108 அனுமன் கோவில்களை நினைவுப்படுத்தும் விதமாக இங்கு 108 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த வீர ஆஞ்சநேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் அளித்து அதனை அருந்தும் போது உடல் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பவுர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையைக் கிரிவலம் செய்வதாக ஐதீகம் உள்ள நிலையில் அந்த நேரத்தில் பக்தர்களும் கிரிவலம் வந்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அமாவாசை நாளில் புதுச் செங்கல்லில் ராம நாமம் எழுதி, அதனைத் தலையில் வைத்துப் படியேறி வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் வெகு விரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவருவதாக பலன் பெற்ற பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி, ராம நவமி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில் மூல நட்சத்திர நாளில் வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபட்டால் காரிய தடைகள், திருமண தடைகள் விலகும் என்பது ஐதீகம்.
வேலை வாய்ப்பு கிடைக்க, உயர் பதவி கிடைக்க இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும் என்பதால் பக்தர்கள் நம்பிக்கையுடன் இங்கு வருகை தந்து அனுமரை வணங்கி வழிபாடு செய்கின்றனர்.
மலை அடிவாரத்திலேயே மிக உயரமான அனுமன் சிலை உலக மக்களை துன்பங்களிலிருந்து காத்து நிற்பது போன்று காட்சியளிக்கிறது. வாயுபுத்திரன், ஆஞ்சநேயர், அனுமன், மாருதி, ராமபக்தன் என்றெல்லாம அழைக்கப்படும் இந்த வீர ஆஞ்சநேயரை நாம் வழிகாட்டியாகக் கொண்டால் வாழ்வு சிறக்கும்; நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கும்; ஆயிரமாயிரம் ஆனந்தக் கதவுகள் திறக்கும் என்பதில் ஐயமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்