

சபரிமலையையே சூறையாடி, மன்னர்களையும் மக்களையும் நடுநடுங்க வைத்த உதயணன் என்ற கொள்ளைக்காரனை அழிக்க பாண்டிய மன்னனுக்கு முதியவர் வேடத்தில் வந்து உதவி புரிந்த ஐயப்பன் வீற்றிருக்கும் கோவில் தான்
பூஞ்சார் தர்ம சாஸ்தா கோவில்
மணிகண்டனாக , மகேஸ்வரனின் மைந்தனாக , மலைவாசனாக, ஐந்து மலைக்கும் அதிபதியாக விளங்கும் ஐயப்பன், கையில் திறந்த வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு காயத்ரி மந்திரத்தின் மூன்றாவது பாதத்தை உபதேசிப்பது போல் காட்சியளிக்கும் பூஞ்சார் தர்ம சாஸ்தா கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மீச்சில் தாலுகாவில் உள்ள பூஞ்சார் என்ற பெரிய கிராமத்தில் அமைந்துள்ளது.
சுவாமி ஐயப்பன் பந்தளத்தின் இளவரசராக இருந்த சமயம் அது... மதுரையிலிருந்து மான விக்ரம ராஜா என்ற பாண்டிய மன்னன், மலையில் மறைந்து வாழும் உதயணனை என்ற கொள்ளையனை வீழ்த்த முடிவு செய்தான். அந்த நேரத்தில் ஒரு வயதான தெய்வீக மனிதர், மான விக்ரமனை சந்தித்து யானையை கட்டுப்படுத்த ஒரு தாடு மற்றும் கொக்கியை கொடுத்து உதயணனை எப்படி அடக்குவது என்றும் கற்றுக் கொடுத்தார்.
இதனையடுத்து மான விக்ரம ராஜா உதயணனுடன் சண்டையிட்டு அவனையும் அவனது யானை படைகளையும் அழித்தார். இதனையடுத்து வெற்றியுடன் திரும்பிய அவர், தான் போரில் வெற்றிபெற முதியவர் வேடத்தில் வந்து உதவியர் அய்யப்பன் தான் என்று அறிந்து அவருக்கு கோவில் எழுப்ப முடிவு செய்தார்.
வெற்றிக்குப் பிறகு, மன்னன் மீனச்சில் ஆற்றில் நீராடுவதற்காக சென்ற போது ஆற்றங்கரையில் வைத்த பனை ஓலைக் குடை, எவ்வளவு முயன்றும் நகராமல் அந்த இடத்திலேயே வேரூன்றி நின்றது! இறைவனின் திருவிளையாடலை உணர்ந்த மன்னன், அதே இடத்தில் எழுப்பிய அதிசய ஆலயம்தான்—கேரள மாநிலம் பூஞ்ஞாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில்!.
பின்னர் மதுரை மற்றும் கேரளாவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களைப் பயன்படுத்தி கலைநயமிக்க கோவிலை எழுப்பியதோடு சக்தி மிக்க கருப்பு நிற கற்களை கொண்டு ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல வரளாறு தெரிவிக்கின்றன.
இன்றும் அந்தக் கோவிலில், மன்னனின் ஓலைக்குடை நிலைநின்ற அந்தப் புனித இடமும், அதற்குப் பின்னால் அமைந்த வரலாற்றுச் சின்னங்களும் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றன!
இக்கோவிலில் வீற்றிருக்கும் அய்யப்பனை வணங்கி வந்தால் எடுத்த காரியம் அனைத்து வெற்றியாய் முடியும், என்பது நம்பிக்கையாக உள்ளது.
மகர மாதத்தில் நடைபெறும் விழாவின் போது சுவாமி ஐயப்பன் தினமும் யானை மீது ஊர்வலம் வரும் நிலையில், விழாவின் எட்டாவது நாளில் புகழ்மிக்க பூஞ்சார் அரண்மனைக்கு சென்று அங்குள்ள கிருஷ்ன கோவிலில் ஐயப்பன் ஓய்வெடுக்கும் வைபவம் விமரிசையாக நடக்கிறது.
பின்னர் அங்கிருந்து யானையில் புறப்பட்டு மீனாட்சி ஆற்றில் நீராடிவிட்டு கோவிலை அடையும் நிகழ்வுகள் இன்றளவும் நடத்தப்படுகிறது.
சபரி மலையில் மண்டல காலத்தில், சபரி மலைக்குச் செல்லும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். அந்த நாட்களில் தினமும் கலமெழுத்து மற்றும் பட்டு என்ற விழா நடைபெறுகிறது.
பாண்டிய மன்னனால் எழுப்பட்ட இக்கோவில் இன்றும் பழைமை மாறாது சிறப்பு பூஜைகளுடன் தெய்வீகமாக வீற்றிருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.