

உலகின் நம்பர் 1 செஸ் வீரராக இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துவிட்டு 15 வயது இந்திய சிறுவன் வந்தன் அலங்கார் சவாய், கேஷுவலாக தூங்க சென்றிருக்கும் சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
நார்வே வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்துவது செஸ் கிராண்ட் மாஸ்டர்களுக்கே சவாலான காரியம். கேன்டிடெட் மாஸ்டர் தர வரிசையில் இருக்கும் டெல்லியைச் சேர்ந்த இந்த சிறுவனின் சாதனை செஸ் உலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
ஆனால் இந்த போட்டியை முடித்த சிறுவன் வந்தன் அலங்கார் சவாய், தனது பெற்றோரிடமோ பயிற்சியாளரிடமோ கூட சொல்லாமல் தூங்க சென்றுள்ளார். பின்னர் மொபைலில் இந்த ரிசல்ட்டைப் பார்த்த சிறுவனின் தந்தைதான் இதைக் கண்டுபிடித்துக் கேட்டுள்ளார்.
ஆகஸ்ட் 18 அன்று நடந்த 'Chess.com' தளத்தின் புகழ்பெற்ற 'டைட்டில்டு டியூஸ்டே' (Titled Tuesday) ஆன்லைன் பிளிட்ஸ் தொடர் நடைபெற்றுள்ளது.
சிறுவன் வந்தன் இதில் விளையாட ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். அவரது தாய் மாதுரி கட்டாயப்படுத்தி விளையாட வைத்துள்ளார்.
கேண்டிடேட் மாஸ்டர் (Candidate Master) தகுதி பெற்ற வந்தனின் ரேட்டிங் 2,288. கார்ல்சனின் ரேட்டிங்கோ 2,823! சுமார் 500 ரேட்டிங் புள்ளிகள் வித்தியாசம் இருந்தபோதிலும், சிறுவன் வந்தன் எவ்வித பயமுமின்றி களமிறங்கியுள்ளான்.
இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் வந்தன், "இழப்பதற்கு எதுவுமில்லை, வெல்வதற்கு மட்டுமே இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் விளையாடத் தொடங்கினேன். எனது வழக்கமான ஓப்பனிங் நகர்வைச் செய்தேன். கார்ல்சன் ஒரு தவறு செய்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்தி காய்களைக் கைப்பற்றி, 50-வது நகர்த்தலில் வெற்றிபெற்றேன்" என அமைதியாக விவரித்துள்ளான்.
வந்தனுக்கு கடந்த 7 ஆண்டுகளாகப் பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர் குர்பிரீத் பால் சிங்கிற்குக்கூட இந்த செய்தி மறுநாள்தான் தெரிந்திருக்கிறது.
அவர் சிறுவனைப் பற்றி பேசுகையில், "வந்தன் களத்தில் மிகக் காரசாரமாக ஆடக்கூடியவன்; ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகக் குறைவாகவே பேசுவான்" எனக் கூறியுள்ளார்.
சிறுவயதில் தன் தாயிடம் செஸ் விளையாடக் கற்றுக் கொண்ட வந்தனுக்கு, செஸ் தவிர புத்தகங்கள் வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. குறிப்பாக வரலாற்றுப் போர்கள் பற்றிய புத்தகங்களை அதிகம் படிக்கும் இந்தச் சிறுவனுக்கு, புனைகதை புத்தகங்களிலோ அல்லது சினிமாக்களிலோ பெரிய ஆர்வமில்லை.
"எதிர்காலத்தில் செஸ்தான் எனது முழுநேரத் தொழிலா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் இந்த வயதிலேயே பலர் கிராண்ட் மாஸ்டர் ஆகிவிடுகிறார்கள். நான் வரலாறு அல்லது அரசியல் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். தற்போதைக்கு இன்டர்நேஷனல் மாஸ்டர் (IM) பட்டத்தைக் கைப்பற்றுவதே என் இலக்கு" எனத் தனது எதிர்காலத் திட்டத்தையும் மிகத் தெளிவாகப் பகிர்ந்து கொள்கிறான் இந்தச் குட்டிச் சாணக்கியன்!
உலகின் மிக சிறந்த வீரரைத் தோற்கடித்துவிட்டு அடுத்த இலக்கை நோக்கி அமைதியாக நகரும் இந்த சிறுவன், பலருக்கும் இன்றைய நாளுக்கான உத்வேகமாக மாறியுள்ளான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்