451 கோடியில் வாரணாசி கிரிக்கெட் மைதானம்... பிறை வடிவ மேற்கூரைகள், திரிசூல வடிவ இரவு விளக்குகள்!!

வாரணாசியில் 451 கோடி ரூபாய் அமைய உள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்தி மோடி அடிக்கல் நாட்டினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமருக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமருக்கு, அடுத்த மாதம் தொடங்கும் ஐசிசி உலகக் கோப்பைக்கு இந்திய அணி அணியும் 'ட்ரீம் 11 இந்தியா' என எழுதப்பட்ட ஜெர்சியை, கிரிக்கெட் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார்.

தொடர்ந்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் 451 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் சர்வ தேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். இந்த அரங்கத்தின் கருப்பொருள் கட்டிடக்கலை சிவபெருமானை குறிக்கும் வகையில் பிறை வடிவ மேற்கூரைகள், திரிசூல வடிவ இரவு விளக்குகள், படித்துறை படிகள் அடிப்படையிலான இருக்கைகள் இடம்பெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் பிசிசிஐ அதிகாரிகள் ரோஜர் பின்னி, ஜெய் ஷா மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மைதானம் வாரணாசி மற்றும் முழு பூர்வாஞ்சல் இளைஞர்களுக்கான பரிசு என்றார். மேலும் சர்வதேச விளையாட்டுகளில் இந்தியா கண்டுவரும் வெற்றி, விளையாட்டு மீதான பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதற்கு சான்று என்றும் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் மட்டுமே அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானங்கள் இருந்தன. ஆனால், தற்போது தொலைதூரத்தில் உள்ள வீரர்களுக்கு இந்த வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com