ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியையும் வென்று ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய அணி. நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்து சாதனைப் படைத்தார்.
இந்தப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் முறையே அரைசதம் மற்றும் சதம் விளாசினர். குறிப்பாக அபிஷேக் 30 பந்துகளில் அடித்த சதம் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. அவர் 34 பந்துகளில் 9 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 108 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஆப்கான் அணி, 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியாவுக்கு எதிராக ஆப்கான் அணி குறைந்த ரன் சேர்த்த இன்னிங்ஸ் இதுதான். நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியை அதிக ரன் வித்தியாசத்தில் (127) வீழ்த்திய அணியாக இந்தியா உருவாக்கியிருக்கிறது.
டி20 போட்டிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அதிக முறை வெற்றி பெற்ற அணிகளில் இந்தியாவும், கனடாவும் உள்ளன. இரண்டும் தலா 10 முறை வெற்றிபெற்றுள்ளன
ஆண்களுக்கான T20I போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை அதிக முறை எடுத்த அணிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அது, இந்த ரன்களை 53 தடவை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச T20I ரன்னிலும் (221/7) இந்தியா இரண்டாவது இடம்பிடித்தது. முதல் இடத்தில் அயர்லாந்து (225/7) உள்ளது.
அனைத்து டி20 போட்டிகளிலும் அதிக சதம் அடித்த இந்திய வீரராக கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார் அபிஷேக் சர்மா. இருவரும் தலா 10 சதங்கள் அடித்துள்ளனர்.
அனைத்து டி20 போட்டிகளிலும் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் (108) அடித்த இந்திய பேட்டர்கள் வரிசையில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
ஒரு T20I இன்னிங்ஸில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் (13) அடித்த பட்டியலிலும் அபிஷேக் சர்மாவே முதலிடத்தில் உள்ளார்.
அதிவேக T20I சதங்கள் (30 பந்துகள்) அடித்த இந்தியா வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மாவே முதலிடத்தில் உள்ளார்.
T20I போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா 3ஆவது இடம்பிடித்தார். முதல் இடத்தில் எஸ்தோனியா வீரர் சாஹில் செளானும் (27 பந்துகள்), இரண்டாவது இடத்தில் துருக்கி வீரர் முகமது ஃபஹத்தும் (29 பந்துகள்) உள்ளனர்.