"அவர் அம்மா சமைச்சு ஹோட்டலுக்கு எடுத்துட்டு வருவாங்க!" - பஞ்சாப் கிங்ஸ் வீரர் பற்றி சிலாகித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா

2019 முதல் பஞ்சாப் அணியில் இருக்கும் இவருக்கு தற்போது சீசனுக்கு 4 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது...
Preity Zinta and Prabhsimran Singh with mother
Preity Zinta and Prabhsimran Singh with mother
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தனது அணியின் நட்சத்திர வீரர் பிரப்சிம்ரன் சிங் குறித்து உருக்கமான தகவல் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பிரப்சிம்ரன் சிங்கின் கடின உழைப்பு மற்றும் அவரது வெற்றிகரமான பயணம் குறித்த பதிவு ஒன்றிற்கு பதிலளித்த ப்ரீத்தி ஜிந்தா, அந்த வீரரின் நற்பண்புகளைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். குறிப்பாக, ஒவ்வொரு ஐபிஎல் சீசனின் போதும் பிரப்சிம்ரன் சிங்கின் தாயார், ஹோட்டலில் தங்கியிருக்கும் மொத்த அணிக்காகவும் தனது கையால் சமைத்த உணவை எடுத்து வருவார் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில், "பிரப்சிம்ரன் சிங் மிகவும் மென்மையான குணம் கொண்டவர் மற்றும் அனைவரிடமும் மரியாதையாக நடக்கக்கூடியவர். அவரது அம்மா ஒவ்வொரு ஆண்டும் மொத்த டீமுக்காகவும் ஹோட்டலுக்கு சாப்பாடு சமைத்துக் கொண்டு வருவார். பல போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட போது கூட, அவர் ஒருமுறை கூட புகார் சொன்னதோ அல்லது பயிற்சிக்குத் தாமதமாக வந்ததோ இல்லை. ஒரு நல்ல மனிதர் வெற்றி பெறுவதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 2019 முதல் பஞ்சாப் அணியில் இருக்கும் இவருக்கு தற்போது சீசனுக்கு 4 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ள அந்த அணி, தோல்வியே அடையாத ஒரே அணியாக கம்பீரமாக வலம் வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்த அணி, பேட்டிங்கில் மிக வலுவாக இருப்பதால் ரன் ரேட் அடிப்படையிலும் +1.067 என முன்னிலையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முல்லன்பூரில் நடைபெற உள்ள போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் எதிர்கொள்ள உள்ளது.

கடந்த 2025 சீசனிலிருந்து பார்த்தால், இலக்கைத் துரத்தி விளையாடிய (Chasing) 11 போட்டிகளில் 9-ல் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியும் அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. மறுபுறம், ஏழாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. மேலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் முழங்கையில் காயமடைந்தது லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதிரடி ஃபார்மில் இருக்கும் பஞ்சாப் அணியைத் தடுத்து நிறுத்த லக்னோ வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com