

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வாளராக அஜித் அகர்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4, 2026 அன்றுடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்றால், அடுத்த தேர்வாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் போட்டியில் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 6 மாதங்களாக இதற்காக BCCI-யின் முக்கியப் புள்ளிகளிடம் காய் நகர்த்தி வருகிறார் பார்த்தீவ்.
அவர் நினைத்தபடி நடந்தால், தேர்வுக்குழுவில் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சீனியர் உறுப்பினராக பார்த்தீவ் பட்டேல் திகழ்வார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளையும், இரானி கோப்பைக்கான இந்திய அணியையும் அகர்கர் தேர்வு செய்தார். இதுவே அவருடைய கடைசித் தேர்வுக் கூட்டமாக இருக்கலாம் என்றும் வலுவான பேச்சுகள் அடிபடுகின்றன.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரிகள், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் ஷுப்மன் கில், டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தேர்வுக் குழுவின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் கலந்துகொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கூட்டத்தில் அகர்கர் கலந்துகொள்ளவில்லை.
பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா, அகர்கர் வெளியூரில் இருந்ததால் கலந்துகொள்ளவில்லை என்றும், இதனை வாரியம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார். ஆனால், நிபுணர்கள் இது நம்பும்படியாக இல்லை என்கின்றனர். BCCI-யின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கூடும் நிகழ்வு சாதாரணமானது இல்லை என்பதால், அதில் தேர்வாளர் மட்டும் இல்லாதது தற்செயலாக இருக்க முடியாது என்கின்றனர்.
தேர்வாளர் குழுவில் இடம்பெறும் நபர்கள் பொதுவாக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள்.
தற்போது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அஜய் ரத்ரா, பிரக்யான் ஓஜா, ஷிவ் சுந்தர் தாஸ், அஜித் அகர்கர் (தலைமைத் தேர்வாளர்), ஆர்.பி. சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அஜித் அகர்கருக்கு மாற்றாக வரும் நபர் மேற்கு இந்தியாவில் இருந்து வர வேண்டியது அவசியம். அந்த வகையில் பார்த்தீவ் பட்டேல் தேர்வு செய்யப்பட்டாலும், தலைமைத் தேர்வாளர் பதவிக்கு போட்டி இருக்கும்.
24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜா முக்கியப் போட்டியாளராகப் பார்க்கப்படுகிறார். ஆர்.பி. சிங் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்