நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், தனது கார் பந்தயப் போட்டிக்காக ஆதரவு தருமாறு இன்று காலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
போர்ச்சுக்கல் நாட்டில் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் போர்ட்டிமாவ் சர்க்யூட்டில் மிச்சலின் லீ மாஸ் கப் தொடரின் இறுதிச் சுற்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கப் போகும் அஜித் மக்களின் அன்பையும் ஆதரவையும் கோரியுள்ளார்.
சிறுவயதில் இருந்தே பைக், கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் அஜித், 2000-களில் அதிகாரப்பூர்வமாகப் பந்தயங்களில் கலந்துகொண்டார். சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக அதிலிருந்து விலகி இருந்தவர், கடந்த 2025ஆம் ஆண்டு முதல் அஜித் குமார் ரேஸிங் என்ற அணியைத் தொடங்கி மீண்டும் கார் பந்தயங்களில் இறங்கியுள்ளார்.
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் குமார், பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். அவரது ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும், ரசிகர்கள் கலையவில்லை.
முதன்முறையாக அஜித் துபாயில் கார் பந்தயத்தில் கலந்துகொண்டபோது, அவரது ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு கொண்டாடினர். சர்க்யூட்டில் ஒரு FDFS ஆக அந்த நாள் அமைந்தது. அப்போது அது ஒரு நாள் கூத்தாக இருக்கும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அடுத்த படங்களின் வெளியீட்டுக்குப் பிறகு, ஒரு வருடம் முழுவதையுமே கார் பந்தயத்துக்காக செலவழித்துள்ளார் அஜித்.
அவரது அணி பரிசுகளையும், குறிப்பிடத்தக்க இடங்களையும் பெற்றாலும், தமிழ் ரசிகர்கள் கார் பந்தயத்தைப் பின்தொடர்வது சுலபமானதாக இல்லை.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கார் பந்தயம் கபடி, கிரிக்கெட் போல நாம் விளையாடக்கூடிய ஒரு ஸ்போர்ட் அல்ல. ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கும் காரை, தூசுகூட இல்லாத சர்க்யூட்டில் பறக்கவிடும் விளையாட்டை இதுவரையில் தமிழ் ரசிகர்கள் ரசித்தது இல்லை.
அஜித் பங்கேற்ற பிறகுதான் 24 மணி நேர கார் பந்தயங்கள் இருப்பதே பலருக்கும் தெரியும். இப்படி இருக்கையில், அஜித் ஆதரவு கேட்டாலும் ரசிகர்கள் கார் பந்தயங்களைப் பின்தொடர்வார்கள் என எதிர்பார்ப்பது எளிதானது அல்ல.
உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் கால்பந்து, கூடைப்பந்து போன்ற போட்டிகளே இந்தியாவில் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. எத்தனையோ போட்டிகளில் இந்தியர்கள் பதக்கங்களை வென்றாலும், கணிசமான மக்களால் நேரலையில் பார்க்கப்பட்டது இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதிப்போட்டிதான்.
இந்த நாட்டில் கிரிக்கெட் மட்டுமே ஒரே ஜனரஞ்சக விளையாட்டாகத் திகழ்கிறது. அதிலும் கூட அனைத்து போட்டிகளும் கவனம் பெறுவதில்லை. கடந்த மாதம் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடிய போட்டிகள் கவனம் ஈர்த்தன. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்றதே அதற்குக் காரணம்.
ஆனால், நேற்று (அக். 06) இளம் வீரர்கள் பங்கேற்ற டி20 போட்டிகள் கவனம் பெறவில்லை. மேலும், கடந்த சில நாட்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற்ற அதே நேரத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. ரசிகர்கள் இரண்டையும் பார்க்க முடியாத சூழல் இருந்தது.
இதற்கிடையில், இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகள் நேற்று (அக். 06) புதுச்சேரியில் மோதின. சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் இடம்பெற்ற அந்தப் போட்டியும் போதிய கவனம் பெறவில்லை. முன்னதாக, செப்டம்பர் 20 முதல் இந்த அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மோதின. அதுபற்றியும் யாரும் கவனம் செலுத்தவில்லை.
இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. அதிகப்படியாக விளம்பரப்படுத்தப்படும் ஐபிஎல் மட்டுமே, கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று பார்க்கும் ஒரே தொடராக உள்ளது. ஊரறிந்த எக்கச்சக்க நட்சத்திரங்களைக் கொண்டுள்ள கிரிக்கெட்டுக்கே இதுதான் நிலைமை.
உலகம் முழுவதும் நாம் ரசித்துப் பார்த்த எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் இன்று பல போட்டிகள், தொடர்களில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் அப்டேட் செய்துகொள்ள முடியாத அளவுக்கு இணையதளம் தகவல்களால் நிறைந்து கிடக்கிறது.
இதுதவிர, ஹாக்கி, டென்னிஸ், கபடி, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும் கணிசமான ரசிகர்கள் உள்ளனர். உதாரணமாக, கால்பந்து வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் பிரபலமாக உள்ளது. ஹாக்கி ஒடிசா, பஞ்சாப், ஹரியானா, ஜார்க்கண்டில் பிரபலமாக உள்ளது. தமிழ்நாட்டிலோ கிரிக்கெட், அதை விட்டால் கபடி மட்டுமே பிரபலமான விளையாட்டுகளாக உள்ளன.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் எனப்படும் பந்தயங்களைப் பொறுத்தவரையில், இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் பெரு நகரங்களில் வசிக்கும் பணக்காரர்களே.
இளைஞர்கள் கூடி விளையாடும் விளையாட்டாக இருப்பவை மட்டுமே மக்களின் வாழ்க்கையோடு கலந்ததாக இருக்கும். மற்ற விளையாட்டுகள் எல்லாம் வெறும் செய்திகள்தான்.
செய்திகளும் எக்கச்சக்கமாக வந்துகொண்டிருக்கும் சூழலில், மக்களால் பொருத்திப் பார்க்க முடியாத ஒரு விளையாட்டாக, ஆடம்பரமான, பணக்காரர்கள் மட்டுமே பங்கேற்கும் கார் பந்தயத்துக்கு ஆதரவு கேட்டு நிற்கிறார் அஜித் குமார்.
இது அவரது பெரும்பாலான ரசிகர்களால் நிறைவேற்ற முடியாத ஒரு கோரிக்கை. அஜித் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றால், நிச்சயம் அந்தச் செய்தியை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்