BCCI Apollo Tyres
BCCI Apollo Tyres

இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய ஸ்பான்சர்.. கடைசி வரை போராடிய 'Canva'.. பிசிசிஐயின் பிரம்மாண்ட ஒப்பந்தம்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்த டிரீம்11 நிறுவனம் தனது ஒப்பந்தத்திலிருந்து ...
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சராக, புகழ்பெற்ற டயர் தயாரிப்பு நிறுவனமான அப்போலோ டயர்ஸ், மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ₹579 கோடி ஆகும். இந்த ஒப்பந்தம் ஒரு போட்டிக்கு ₹4.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முன் இருந்த ஸ்பான்சர் வழங்கிய தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரீம்11 விலகலுக்குக் காரணம் என்ன?

மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் கேமிங் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்த டிரீம்11 நிறுவனம் தனது ஒப்பந்தத்திலிருந்து விலகியது. இது பிசிசிஐக்கு ஒரு புதிய ஸ்பான்சரைத் தேடும் நிலையை உருவாக்கியது. டிரீம்11 நிறுவனம் இதற்கு முன்னர் ஒரு போட்டிக்கு ₹4 கோடி செலுத்தி வந்தது.

புதிய ஸ்பான்சருக்கான டெண்டர்களை பிசிசிஐ வெளியிட்டபோது, ஆன்லைன் கேமிங், பந்தயம், கிரிப்டோ, புகையிலை, விளையாட்டு ஆடைகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கக் கூடாது என நிபந்தனை விதித்தது. ஆனாலும், டெண்டருக்கு பெரும் டிமாண்ட் இருந்தது. 

டிரீம்11-க்கு முன், சஹாரா, ஸ்டார், ஒப்போ மற்றும் பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் பிசிசிஐயின் முக்கிய ஸ்பான்சர்களாக இருந்தன. இவர்களில் ஸ்டார் நிறுவனம் மட்டுமே தனது முழு ஒப்பந்த காலமான 2014 முதல் 2017 வரை முழுமையாகப் பூர்த்தி செய்தது. மற்ற நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக, ஒப்பந்தத்தின் நடுவிலேயே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்த தொகையைச் செலுத்த முடியாமல் போயின. இந்த அனுபவங்களால், பிசிசிஐ ஒரு நிலையான, நம்பகமான பிராண்டுடன் கூட்டணி வைக்க விரும்பியது. அப்போலோ டயர்ஸ் போன்ற ஒரு நிறுவனம் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதாக பிசிசிஐ கருதுகிறது.

நிலையான கூட்டணிக்கு முக்கியத்துவம்

டிரீம்11 போன்ற பரபரப்பான, புதிய தலைமுறை நிறுவனங்களை விடுத்து, அப்போலோ டயர்ஸ் போன்ற பாரம்பரிய மற்றும் நிலையான நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், பிசிசிஐயின் அணுகுமுறை மாறியுள்ளது. முன்னர் அதிகப் பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்த பிசிசிஐ, இப்போது நம்பகத்தன்மைக்கும், பிராண்டின் மதிப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு நிறுவனத்தின் பெயர் வீரர்களின் ஜெர்சியில் இடம்பெறும்போது, அதன் மதிப்பு கிரிக்கெட்டின் மதிப்பை பிரதிபலிக்க வேண்டும் என பிசிசிஐ நினைப்பதாகத் தெரிகிறது.

இந்த ஒப்பந்தத்தில், அப்போலோ டயர்ஸ் நிறுவனம் இரண்டாவது அதிகபட்ச ஏலத்தொகையை (₹554.48 கோடி) கோரிய ஆஸ்திரேலிய மென்பொருள் நிறுவனமான கேன்வா-வை (Canva) பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம், இந்திய கிரிக்கெட் அணியின் மதிப்பு குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளது. கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடுகள், அதன் பிராண்ட் மதிப்பை உயர்த்தியுள்ளது. இதன் மூலம், டிரீம்11 தொடர்ந்திருந்தால், அடுத்த ஒப்பந்தம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்:

இந்த ஒப்பந்தத்தின் படி, அப்போலோ டயர்ஸ் ஐசிசி போட்டிகள் தவிர்த்து, மற்ற அனைத்து சர்வதேச போட்டிகளுக்கும் ஒரு போட்டிக்கு ₹4.5 கோடி செலுத்தும்.

ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போன்ற போட்டிகளில், ஸ்பான்சர் பெயர் வீரர்களின் ஜெர்சியின் முன் பகுதியில் இடம்பெறாது. அதற்குப் பதிலாக, வீரர்களின் கையில் மட்டுமே இடம்பெறும். இந்த போட்டிகளுக்கு ஒரு போட்டிக்கு ₹1.72 கோடி மட்டுமே மதிப்பு.

இந்த மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில், இந்திய ஆண்கள் அணி ஒரு டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு 50 ஓவர் உலகக் கோப்பையிலும், பெண்கள் அணி ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஒரு டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்க உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மட்டுமல்லாமல், 'ஏ' அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கும் பொருந்தும்.

பிசிசிஐயின் செயலாளர் தேவதாஜித் சைகியா, “எங்கள் அணியின் கடின உழைப்பு மற்றும் நிலையான செயல்பாடுகளுக்கு அப்போலோ டயர்ஸ் ஒரு புதிய ஸ்பான்சராக வருவது ஒரு சான்றாகும். இந்த ஒப்பந்தம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்ற இரண்டு அமைப்புகளுக்கு இடையிலான ஒரு கூட்டணி” என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com