

விளையாட்டு உலகில், குறிப்பாக ஓட்டப்பந்தயங்களில் உயரம் அதிகமானவர்களே சாதிக்க முடியும் என்ற ஒரு எழுதப்படாத விதி நீண்ட காலமாக இருந்தது. நீண்ட கால்கள் இருந்தால் எட்டுகளைப் பெரிதாக எடுத்து வைத்து எளிதாக எல்லையைத் தொடலாம் என்பதே இதற்கு அடிப்படை அறிவியல் காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஜமைக்காவைச் சேர்ந்த ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் (Shelly-Ann Fraser-Pryce) இந்த விதியைத் தவிடு பொடியாக்கி, உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். வெறும் 5 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர், 3 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும், 10 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்று வரலாறு படைத்துள்ளார்.
பொதுவாக ஓட்டப்பந்தய வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வெற்றியாளர்கள் அனைவரும் சராசரியாக 5.6 அடிக்கு மேல் உயரம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். 1928-ல் தங்கம் வென்ற பெட்டி ராபின்சன் முதல் வில்மா ருடால்ப், மரியன் ஜோன்ஸ் வரை அனைவரும் உயரமானவர்களே. ஏன், ஷெல்லியின் சமகாலப் போட்டியாளர்களான எலைன் தாம்சன் மற்றும் அமெரிக்காவின் கார்மெலிடா ஜெட்டர் ஆகியோரும் இவரை விட உயரமானவர்களே. ஆனால், இந்த உயரக்குறைவை ஒரு குறையாக நினைக்காமல், அதையே தனது "சூப்பர் பவர்" ஆக மாற்றிக்கொண்டார் ஷெல்லி.
ஷெல்லியின் வெற்றியின் முதல் ரகசியம் அவரது மின்னல் வேகத் தொடக்கம் (Lightning Start). துப்பாக்கி வெடித்த அடுத்த நொடியே, பிளாக்கிலிருந்து ஒரு ராக்கெட் போலச் சீறிப் பாய்வது இவரது தனிச்சிறப்பு. சிறுவயதில் ஜமைக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஓடிய அனுபவமே தனக்கு ஓடுவதற்கான முதல் உந்துதல் என்று அவர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். தனது உயரக்குறைவைச் ஈடுகட்ட, அவர் தனது எதிர்வினை நேரத்தை (Reaction Time) மைக்ரோ வினாடிகளில் குறைத்துப் பயிற்சி எடுத்துள்ளார். இதனால், போட்டியின் முதல் 10 மீட்டர்களிலேயே அவர் முன்னிலை பெற்றுவிடுவார்.
உயரமான ஓட்டப்பந்தய வீரர்கள் ஒரு எட்டில் கடக்கும் தூரம் அதிகம். உதாரணமாக, ஜமைக்காவின் ஜாம்பவான் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தைக் கடக்க வெறும் 41 எட்டுகளை (Strides) மட்டுமே எடுத்து வைப்பார். ஆனால், அதே தூரத்தைக் கடக்க ஷெல்லிக்கு சுமார் 54 எட்டுகள் தேவைப்படும். அதாவது, மற்றவர்களை விட இவர் அதிக முறை கால்களைத் தரையில் ஊன்றி எடுக்க வேண்டும். இதற்கு அசாத்தியமான ஆற்றல் தேவை. இதற்காகவே அவர் "பிளையோமெட்ரிக்ஸ்" (Plyometrics) எனப்படும் குதிக்கும் அறிவியல் பயிற்சியைக் கடுமையாக மேற்கொண்டார்.
ஓடும்போது மேல்நோக்கிக் குதிப்பது போல ஓடாமல் (Popping up), ஒரு விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்புவது போல முன்னோக்கிச் செல்லும் விசையில் (Horizontal force) அவர் கவனம் செலுத்தினார். "நான் உயரமாக இல்லை என்பது எனக்குத் தெரியும், அதனால் நான் அதிக எட்டுகளை எடுத்து வைக்க வேண்டும். என் கால்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும், மேல்நோக்கி அல்ல," என்று ஷெல்லி தனது நுட்பத்தைப் பற்றி விளக்கியுள்ளார். உயரமானவர்கள் எடுக்கும் எட்டுகள் சில சமயங்களில் வேகத்தைக் குறைக்கலாம், ஆனால் ஷெல்லியின் சிறிய மற்றும் வேகமான எட்டுகள் அவருக்குச் சாதகமாக அமைந்தன.
உடல் வலிமை (Core Strength) என்பது ஷெல்லிக்கு ஆரம்பத்தில் பலவீனமாக இருந்தது. வேகமாக ஓடும்போது உடல் அலைபாயாமல், ஒரு பீரங்கி குண்டு போல நேராகச் செல்ல வேண்டும் என்றால், வயிற்றுப்பகுதி தசைகள் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். இதற்காக அவர் தனது உடல் வலிமையை மேம்படுத்தி, ஓடும்போது சிறிதும் வேகம் குறையாமல் நேர்க்கோட்டில் சீறிப்பாய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
2025 டோக்கியோ உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் ஷெல்லி, உயரம் என்பது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துள்ளார். "எனது 5 அடி உயரம்தான் எனது சூப்பர் பவர்," என்று பெருமையுடன் கூறும் அவர், இனி வரும் குட்டையான உயரம் கொண்ட பல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகத் திகழ்வார் என்பதில் ஐயமில்லை. அறிவியல் விதிகளையே மாற்றி எழுதிய இந்த "பாக்கெட் ராக்கெட்"டின் சாதனைகள் தடகள வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.