

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கவிருக்கிறது.
இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா காயமடைந்திருப்பதால், அவருக்கு மாற்றாக 29 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் நபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஆக்கிப் நபி, பர்வேஸ் ரசூல் மற்றும் உம்ரான் மாலிக்கைத் தொடர்ந்து, காஷ்மீரில் இருந்து இந்திய சர்வதேச அணிக்கு அழைக்கப்பட்டுள்ள 3-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இவரது பந்துவீசும் விதம் தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஸ்டெயினை நினைவுபடுத்துவதால், 'லோக்கல் ஸ்டெயின்' என வர்ணிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆக்கிப் நபி தகுதியான அழைப்பைப் பெற்றுள்ளதாக ரசிகர்கள் அவரை வரவேற்கின்றனர்.
ஆக்கிப் நபி நீண்ட நாட்களாக உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். தொடர்ச்சியான ஃபார்மிலும் இருக்கிறார்.
கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, கடந்த 2025–26 சீசனில் அவர் வீழ்த்திய 60 விக்கெட்டுகள்தான் ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது என்றால் மிகையாகாது.
இது மட்டுமல்லாமல், முதல் தர கிரிக்கெட்டில் 43 போட்டிகளில் 162 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலான ரெக்கார்டுகளை வைத்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் ஆக்கிப் நபி. ஐபிஎல் கைகூடாவிட்டாலும், இலங்கைக்கு எதிரான இந்தியா ஏ அணி போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளில் நெட் பௌலராகவும் இருந்திருக்கிறார்.
ஐபிஎல் தரவுகளைக் கடந்து, வீரரின் உண்மையான திறனை அடிப்படையாகக் கொண்டு ஆக்கிப் நபியைத் தேர்ந்தெடுத்திருப்பதற்காக பிசிசிஐ-க்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
ஆக்கிப் நபியின் தேர்வு குறித்து பேசியுள்ள பர்வேஸ் ரசூல், "உனக்கானது உன்னைத் தேடி வரும். எந்த ஒரு நிராகரிப்போ அல்லது புறக்கணிப்போ உன் தலைவிதியை மாற்றிவிட முடியாது." எனக் கூறியுள்ளார்.
ஷுப்மன் கில் (c), கே.எல். ராகுல் (vc), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (wk), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (wk), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் ஜாஷிப் பாடிக்கல், சரன்ஷ் ஜெயின், ஆக்கிப் நபி.