

டாக்கா நகரில் நடைபெற்ற பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, ஐந்தாம் நாள் ஆட்டத்தின் கடைசி பகுதியில் வங்கதேசத்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறித் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் புள்ளிப் பட்டியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள வங்கதேச அணி, புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுமே தற்போதைய சாம்பியன்ஷிப் சுழற்சியில் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இருப்பினும், வங்கதேசம் மூன்று போட்டிகளில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் வங்கதேசம் முன்னிலை பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, வங்கதேச அணி 44.44 சதவீதப் புள்ளிகளுடன் (PCT), ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியாவிற்கு (48.15%) மிக அருகில் வந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் புள்ளி சதவீதம் 33.33 ஆகக் குறைந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன, தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. வங்கதேசத்தின் இந்த வெற்றியால், தற்போதைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத ஒரே அணியாக மேற்கிந்தியத் தீவுகள் மட்டுமே உள்ளது.
இந்தப் போட்டியின் சுருக்கமான விபரங்களைப் பார்த்தால், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 413 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாந்தோ அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவருக்குத் துணையாக மொமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் அரைசதங்கள் அடித்து வலு சேர்த்தனர். இதற்குப் பதிலடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அஸான் அவைஸ் சதம் அடித்து அசத்தினார். வங்கதேச தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. கேப்டன் சாந்தோ மீண்டும் சிறப்பாக விளையாடி 87 ரன்களைச் சேர்த்தார். 268 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கிப் பயணித்த பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது. அப்துல்லா ஃபசல் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால், வங்கதேசத்தின் 23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ரானாவின் அனல் பறக்கும் பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
நஹித் ரானா 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்து பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தார். இதனால் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருது வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாந்தோவிற்கு வழங்கப்பட்டது. வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ரேசில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.