2022 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக முழுப் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி புறப்பட்டுச் சென்ற நிலையில், பும்ராவுக்குப் பதிலாக இதுவரை எந்த வீரரும் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.
உலகக் கோப்பையிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா வெளியேறிய பிறகு, அவர் சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் பும்ரா நாட்டுக்காக விளையாடும் போது காயம் அடைகிறார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது தவிர, சில விமர்சகர்கள் அவரை மிட்செல் ஸ்டார்க்குடன் ஒப்பிட்டுள்ளனர். இரண்டு வீரர்களும் கடந்த காலங்களில் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் ஸ்டார்க் ஐபிஎல் லீக்கில் தொடர்ந்து விளையாடவில்லை. ஆனால் அவருடைய நாடான ஆஸ்திரேலியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று ஒப்பீடு செய்து விமர்சித்து வருகின்றனர்.
தற்போது ஜஸ்பிரித் பும்ரா அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் கருத்தைப் பகிர்ந்துள்ளார். இது அவருக்கு எதிரான விமர்சகர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. "குரைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கல் எறிந்தால், இலக்கை அடைய மாட்டீர்கள்" என்று பதிவிட்டுள்ளார் பும்ரா.
டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பிறகு பும்ரா ட்வீட் செய்து அவரது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். "நான் இந்த முறை T20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன் என்பதில் வருத்தமாக இருக்கிறேன். ஆனால் எனது அன்புக்குரியவர்களிடமிருந்து பெற்ற நல்வாழ்த்துக்கள், கவனிப்பு மற்றும் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் குணமடைந்தவுடன், விரைவில் போட்டிகளில் பங்கேற்பேன். ” எனப் பதிவிட்டுள்ளார்.