

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு களத்தில் வீரர்களின் செயல்பாடு மட்டுமல்லாமல், அணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளும் காரணமாக இருக்கலாம் என முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். குறிப்பாக பாபர் அசாம் மற்றும் ஷஹீன் ஷா அஃப்ரிடி இடையேயான கேப்டன்சி பிரச்சினை தான் பாகிஸ்தான் அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி சமீப காலமாக டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் தடுமாறி வருகிறது. அணியின் தொடர் தோல்விகளால் கேப்டன்சி, வீரர்களின் தேர்வு மற்றும் களத்தில் எடுக்கப்படும் முடிவுகள் என அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி, அணியின் தற்போதைய நிலை குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். பாபர் அசாம் சிறந்த பேட்டராக இருந்தாலும், கேப்டனாக பல முக்கியமான தவறுகளை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு பாபர் அசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி இடையேயான கருத்து வேறுபாடுகளே முக்கிய காரணம் என முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான பாசித் அலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, பாபர் அசாம் வலிமையான கேப்டன் இல்லை என்றும், அவர் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாபர் மற்றும் ஷஹீன் இடையே கேப்டன் பதவி தொடர்பாக பிரச்சினை ஏற்பட்ட காலகட்டத்தில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலை மோசமடையத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாபர் சிறந்த பேட்டர் என்றும், ஷஹீன் சிறந்த பந்துவீச்சாளர் என்றும் பாராட்டப்பட்டாலும், இருவருக்கும் இடையே உருவான பிளவு அணியின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாசித் அலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் மாற்றம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத் என வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
அடிக்கடி நடந்த கேப்டன்சி மாற்றத்தால் அணியின் நிலைத்தன்மையையும் பாதித்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனுடன் மூத்த வீரர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளும் சேர்ந்து அணியின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என கைப்பற்றியது. இந்த தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணி நிர்வாகம் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அணியில் ஏராளமான புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் பயிற்சிக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சாய்ம் அயூப் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகியோருடன், சர்வதேச அளவில் அனுபவம் கொண்ட மேலும் ஐந்து வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரஃபாத் மின்ஹாஸ், முகமது இம்ரான் ஜூனியர், சாத் பெய்க், முகமது இம்ரான் ரந்தாவா மற்றும் ரசாவுல்லா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆஷ்லி நாஃப்கே ஆகியோரும் டெஸ்ட் அணியின் பயிற்சிக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அணியில் செய்யப்பட்ட மற்றொரு முக்கிய மாற்றமாக, முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் ஆகா, அலி உஸ்மான், ஆமர் ஜமால், அவாய்ஸ் ஜாஃபர் மற்றும் குர்ரம் ஷாசாத் ஆகிய ஏழு வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர் தோல்விகள், கேப்டன்சி குழப்பம் மற்றும் அணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் அணிக்கு, இந்த மாற்றங்கள் எந்த அளவுக்கு பலன் தரும் என்பது அடுத்தடுத்த போட்டிகளில் தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்