தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. STREET CHILD UNITED என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தெருவோர குழந்தைகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 25 ம் தேதி போட்டி தொடங்கி 30 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 அணிகள் பங்கேற்கும் போட்டியில் இந்தியா சார்பில் 7 அணிகளும் பிற நாடுகளை சேர்ந்த 12 அணிகளும் பங்கேற்க உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆற்காடு நவாப் ஆசிப் அலி பேசியது, 6 மாதங்களுக்கு முன் என்னை STREET CHILD UNITED என்ற அமைப்பு தொடர்பு கொண்டு தெருவோர குழந்தைகளுக்கான உலகக்கோப்பை குறித்து பேசினர். அமீர் மஹாலில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்த அனுமதி கொடுத்துள்ளோம்.
தெருவோர குழந்தைகளுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெறுவது நமது சென்னைக்கு பெருமை என்றார். போட்டியை காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்