உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா அபார வெற்றி  

Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல்-ஹக் 36 ரன்களு எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, பாண்டியா, சிராஜ், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய ரோகித் 63 பந்துகளில் 86 ரன்களை குவித்தார். ரோகித் ஷர்மாவுடன் ஆடிய சுப்மன் கில் 16 ரன்களிலும், அடுத்து வந்த விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு எளிதாக வெற்றி பெற்றது. போட்டி முடிவில் ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களிலும், கே.எல். ராகுல் 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பாகிஸ்தானை 8-வது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா வெற்றி பெற்றதும் மைதானத்தின் வெளியே கூடிய ரசிகர்கள் வெடி வெடித்தும் ஆடியும், பாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com