ருதுராஜ் ருத்ரதாண்டவம் ஆட, பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக பந்து வீச, மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. துபாயில் நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டு பிளிசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, பெரிதும் எதிர்பார்த்த மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைப்போல ஜடேஜாவும், பிராவோவும் அற்புதமாக விளையாடினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.
157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. சென்னை அணி பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக பந்து வீச, மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். கேப்டன் பொல்லார்ட் 15 ரன்னில் வெளியேறியதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி உறுதியானது. சவுரப் திவாரி கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால், மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.