

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இந்திய அணிக்கு ரொம்பவே மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. பேட்டிங்கில் இந்திய வீரர்கள் சொதப்பியது மட்டுமின்றி, கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு அதிர்ச்சியான ஷாட் அடித்து ஆட்டமிழந்ததுதான் முன்னாள் ஜாம்பவான்கள் பலரையும் கோபப்பட வைத்துள்ளது.
இந்திய அணியின் சூழல் மிகவும் மோசமாக இருந்தபோது, கேப்டனாக இருக்கக்கூடிய ரிஷப் பண்ட், பொறுப்பாக விளையாடாமல் அவுட்டானார். இதைத்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவும், தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இந்திய அணி 174 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறிய நிலையில் இருந்தது. ஒருபுறம் வாஷிங்டன் சுந்தர் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில், தென்னாப்பிரிக்காவின் உயரமான வேகப்பந்து வீச்சாளரான மார்கோ ஜான்சன் பந்து வீச வந்தார். ரிஷப் பண்ட் சற்றுக் களத்தை விட்டு முன்னால் நகர்ந்து வந்து, எதிர்பாராத ஒரு பெரிய ஷாட்டை அடிக்க முயன்றார். ஆனால், பந்து லேசாக அவரது பேட்டில் பட்டு, விக்கெட் கீப்பர் கையில் கேட்ச் ஆனது. அணி மிக மோசமான நிலையில் இருக்கும்போது, இப்படி ஒரு பொறுப்பற்ற ஷாட்டை அடித்ததுதான் விமர்சனத்திற்குக் காரணம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் கும்ப்ளே, "இப்போதைய வீரர்கள் எல்லாம், 'இது என் இயல்பான ஆட்டம் (Natural Game)' என்று சொல்லுவார்கள். ஆனால், நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மைதானத்தில் ரிஷப் பண்ட் இருக்கும் வரை, தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். அவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர். ஆனால், வெறும் 10 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், இப்படி நீங்கள் செய்யவே கூடாது. இது ஒரு நல்ல ஆடுகளம். நீங்கள் பொறுமையாக நின்று விளையாடினால் போதும். தாராளமாக ரன்கள் வரும். மார்கோ ஜான்சன் தொடர்ந்து 20 ஓவர்கள் வீசப்போவதில்லை. நீங்கள் ஓவருக்கு ஓவர் அல்ல, செஷனுக்கு செஷன் நின்று விளையாட வேண்டும். இது டெஸ்ட் கிரிக்கெட், ஒரு ஓவரில் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியாது!" என்று கும்ப்ளே மிகக் காட்டமாகப் பேசினார்.
டேல் ஸ்டெய்னின் கண்டனம்: தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் மின்னல் வேகப் பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், "அது ஒரு Brain-Fade Shot என்று நேரடியாக விமர்சித்தார். "நீங்கள் இதெல்லாம் செய்யவே கூடாது (You Can't Do That)" என்று கும்ப்ளேவுடன் சேர்ந்து ஸ்டெய்னும் பண்ட்டின் ஆட்டத்தை விமர்சித்தார்.
இந்திய அணிக்கு ஒரு கேப்டனாக அவர் பொறுப்பாக விளையாடியிருக்க வேண்டும் என்றும், அணியை சரிவிலிருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்ததாகவும், ஆனால், அவர் அடித்த தவறான ஷாட் அணியை மேலும் சிக்கலில் ஆழ்த்திவிட்டது என்றும் விமர்சகர்கள் ஒருமித்த குரலில் கூறியுள்ளனர். தென்.ஆ., அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இன்றைய ஆட்ட நேரம் முடிவில், தென்.ஆ., விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்தியாவை விட 314 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.