harish rauf
harish rauf

மிக மிக கீழ்த்தரமான செய்கை.. இந்திய ரசிகர்களை நோக்கி.. கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் நடந்து கொண்ட பாக்., வீரர் ஹாரிஸ் ராஃப்!

கிரிக்கெட் மீதான அன்பையும் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்களை...
Published on

துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில், நேற்று (செப்.21) கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித் தள்ளியது. இந்த பரபரப்பான போட்டியில், களத்தில் நடந்த விளையாட்டை விட, களத்திற்கு வெளியே நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தால் அதிகம் பேசப்பட்டது. அந்த சம்பவத்தின் மையப்புள்ளியாக இருந்தவர் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப்.

இந்திய ரசிகர்களின் கோபத்தை வெளிப்படையாகத் தூண்டிய அவரது செயல்கள், கிரிக்கெட் மீதான அன்பையும் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்களை மீண்டும் நினைவுபடுத்தியது. இந்தப் போட்டியில், இந்திய ரசிகர்கள், பவுண்டரி லைன் அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஹாரிஸ் ராஃப் நின்றுக் கொண்டிருந்த இடத்தில் "கோலி, கோலி" என கூச்சலிட்டனர். இந்த கோஷம், 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ராஃபின் பந்துவீச்சில் அடித்த மறக்க முடியாத இரண்டு சிக்ஸர்களை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது.

ஆரம்பத்தில், ரசிகர்களின் சத்தத்தைக் கேட்காதது போல காதுகளில் கை வைத்து, மேலும் உற்சாகப்படுத்தும்படி ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். ஆனால், ரசிகர்கள் கோஷமிடுவதை நிறுத்தாத நிலையில், அவர் தனது மிகவும் சர்ச்சைக்குரிய அந்த சைகையைச் செய்தார். தனது கைகளை உயர்த்தி "6-0" என்று சைகை காட்டினார். இந்தச் சைகை, 'ஆபரேஷன் சிந்துர்' நிகழ்வின் போது, இந்திய விமானப்படையின் ஆறு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு முன்வைத்த ஆதாரமற்ற ஒரு அரசியல் கூற்றை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்தது.

அத்துடன் நில்லாமல், ராஃப் ஒரு விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற ஒரு சைகையையும் செய்து, ரசிகர்களின் கோபத்தை மேலும் தூண்டினார். இந்தச் சம்பவங்கள் உடனடியாக சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

வெறும் ரசிகர்களுடன் மட்டுமல்லாமல், இந்திய வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோருடனும் ராஃப் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுப்மான் கில் அடித்த பவுண்டரிக்கு பிறகு, அபிஷேக் - ராஃப் இடையே வார்த்தைப்போர் ஏற்படவே, நடுவர் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சர்ச்சை நிகழ்வுகளுக்கு நடுவே, இந்திய அணி பேட்டிங்கில் தனது வலிமையைக் காட்டி, 172 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான 74 ரன்களும், சுப்மன் கில்லின் சிறப்பான 47 ரன்களும் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தன. இதன் மூலம், ராஃபின் சர்ச்சைக்குரிய சைகைகளுக்கு களத்திலேயே தனது ஆட்டத்தின் மூலம் இந்திய அணி பதிலடி கொடுத்தது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதட்டங்கள், இந்த போட்டிக்கு முன்பே இரு அணி வீரர்களும் கைகுலுக்க மறுத்த சம்பவம், பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்தபோது பேட்டை துப்பாக்கி போல் காட்டியது என பல சர்ச்சைகளும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com