இந்தியா - நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று முடிவடைந்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 720 ரன்கள் அடித்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர்களை ஆல் அவுட் செய்ய முடியாததால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்த டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது முதலே பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு உத்திகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி.
நியூசிலாந்து அணி 119/2 என்ற நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டு வந்தனர். சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இணை பொறுமையாக விளையாடி விக்கெட் கொடுக்காமல் நிலைத்து நின்றது.
டேரில் மிட்செல் 186 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே நேரத்தில் கிளென் பிலிப்ஸ் 126 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தம் 120 ஓவர்கள் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239/5 என்ற நிலையில் போட்டியை முடித்தது.
15 ஓவர்கள் மீதமிருந்தபோதே இந்திய அணி டிராவுக்கு ஒப்புக்கொண்டது.
வேகப்பந்து வீச்சாளர்கள் சோர்வடைந்திருந்ததும், பிட்ச் பந்துவீச்சுக்கு உதவாததுமே டிராவுக்கு ஒப்புக்கொள்ளக் காரணம் என கேப்டன் கில் தெரிவித்திருந்தார்.
அணியில் ஒரு முழுமையான சுழற்பந்து வீச்சாளர் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் கங்குலி.
அவரது பதிவில், "இந்தியா சிவப்பு பந்து, வெள்ளைப் பந்து என இரண்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால், வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, போட்டி செல்லச் செல்லத் தட்டையாக மாறும் பிட்ச்களில் ஒரு உண்மையான சுழற்பந்து வீச்சாளர் அவசியம். இதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாஷிங்டன் ஆல்ரவுண்டராக விளையாடலாம். ஆனால், குல்தீப் அல்லது மானவ் சுதர் எங்கே?" எனக் BCCI-ஐ நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் வெளியில் அமரவைக்கப்பட்டது சர்ச்சையானது. அதற்குப் பதிலளித்த கில், "சிராஜ் ஒரு சிறந்த வீரர். இந்தியாவுக்காக நன்றாக விளையாடியவர். ஆனால், அதற்கு முன்பாக அவர் எனக்கு மிக நல்ல நண்பர். இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவரை அணியிலிருந்து வெளியே விடுவது எனக்கும் மிகக் கடினமான முடிவுதான்.
வீரர்களின் தற்போதைய ஃபார்மைப் பொறுத்தே அணி தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு வீரருக்கும் தங்களின் சிறந்த ஃபார்மில் இல்லாத நிலை வரும். சிராஜ் போன்ற வீரர் இங்கிருந்து இன்னும் சிறப்பாகத் திரும்பி வருவார். அவர் கடுமையாக உழைத்து அணிக்காக நன்றாக விளையாட விரும்பும் தன்மை கொண்டவர்" என்றார்.
மேலும், போட்டிக்கு முன்பே சிராஜிடம் அணியின் முடிவை விளக்கியதாகவும், அவர் அதைப் புரிந்துகொண்டதாகவும் கூறினார் கில்.
விக்கெட் எடுக்க முடியாததால், 15 ஓவர்கள் மீதமிருக்கும்போதே ஆட்டம் முடிக்கப்பட்டு டிராவில் முடிந்தது. நவம்பர் 27ஆம் தேதியே அடுத்த போட்டி இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கில் தெரிவித்துள்ளார். சிராஜ் அல்லது ஜடேஜா அணியில் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் இருந்திருக்குமா என்ற கேள்விக்கு, "இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை" என்று தெளிவாகப் பதிலளித்தார்.
அடுத்த போட்டியில் அணியில் மாற்றம் இருக்குமா அல்லது வேறுவிதமான உத்திகளை இந்திய அணி கையாளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்