
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பை 2025 தொடரில் இதைவிட ஒரு சிறந்த தொடக்கத்தை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது. டி20 உலகக் கோப்பை சாம்பியன்களான இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த வெற்றியை இந்தியா சாதித்த விதம் மிகவும் அபாரமானது. மொத்தத்தில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 106 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன.
பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஷிவம் துபே 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 13.1 ஓவர்களில் வெறும் 57 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. பின்னர், 57 ரன்கள் என்ற இலக்கை இந்தியா ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 4.3 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. இந்தப் போட்டி இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நடைபெற்றது.
போட்டி முடிந்த பிறகு, முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், சூர்யகுமார் யாதவிடம், "இது நம்ப முடியாத வெற்றி. உங்கள் ஆதிக்கத்தை பார்க்க முடிந்தது. முழு போட்டிக்கும் உங்களுக்கு முழு சம்பளம் கிடைக்குமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது," என்று கேட்டார்.
மஞ்ரேக்கரின் கேள்வியை லாவகமாகத் தவிர்த்த சூர்யா, "அதைப் பற்றி பின்னர் பேசலாம். ஆனால், அணியின் சிறந்த செயல்பாடு இது. களத்தில் நல்ல ஆற்றலும், மனப்பான்மையும் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். பிட்ச் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்பினோம். இரண்டாவது இன்னிங்ஸிலும் அது அப்படியே இருந்தது. வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. சமீபத்தில், நிறைய வீரர்கள் இங்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக வந்திருந்தனர். பிட்ச் நன்றாக இருந்தது, ஆனால் சற்று மெதுவாக இருந்தது, அதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. குல்தீப் சிறப்பாக செயல்பட்டார், ஹர்திக், துபே மற்றும் பும்ராவிடமிருந்து நல்ல சப்போர்ட் கிடைத்தது.
அபிஷேக் தற்போது உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. நாங்கள் 200 ரன்களை துரத்தினாலும் அல்லது 50 ரன்களை துரத்தினாலும், அவர் அணியின் ஆட்டத்திற்கு சரியான தொடக்கத்தை ஏற்படுத்துகிறார். அவருடைய ஆட்டம் நம்ப முடியாதது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ளோம்" என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இந்தியா அடுத்ததாக செப்டம்பர் 14 அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.