"நானும் மனிதன் தான்; எனக்கும் வலிக்கும்.." இந்தியாவுக்கு எதிரான தோல்வி.. இன்னமும் ஜீரணிக்க முடியாமல் புழுங்கும் வாசிம் அக்ரம்

“நான் ஒரு மனிதன். மற்ற பாகிஸ்தான் ரசிகர்களைப் போலவே நானும் ஏமாற்றமாகவும், மனச்சோர்வாகவும் ...
Wasim Akram
Wasim Akram
Published on
Updated on
2 min read

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், தனது நாட்டு அணியின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து, குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆசிய கோப்பை 2025 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி படு மோசமாக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வசீம் அக்ரம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகிய இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறியது அவருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அக்ரம், “குல்தீப் யாதவ் பந்துவீசும் விதத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் சன்னி பாய் (சுனில் கவாஸ்கர்) உடன் பேசியபோது, பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்தைப் படிக்கத் தெரியாவிட்டால், அந்த மாதிரியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது என்று சொன்னார். அதுதான் நடந்தது. அவர்கள் குல்தீப்புக்கு எதிராக இரண்டாவது பந்துக்கே ஸ்வீப் அடிக்க முயற்சி செய்தனர், இதன் அர்த்தம், அவர்கள் அவரைப் படிக்கவில்லை என்பதுதான்” என்று கூறினார்.

63 'டாட் பால்'கள் - மோசமான பேட்டிங்

பாகிஸ்தான் பேட்டிங் வரிசையின் பலவீனத்தை சுட்டிக்காட்டிய அக்ரம், "பாகிஸ்தான் அணி இந்த இன்னிங்ஸில் 63 டாட் பந்துகளை விளையாடியது. அதாவது, 10 ஓவர்களுக்கு மேல் ரன் எதுவும் எடுக்கவில்லை. இது இந்தியப் பந்து வீச்சாளர்களின் சிறப்பாக பந்துவீச்சை காட்டுகிறது. ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ் மற்றும் எங்கள் கேப்டன் ஆகியோர் திறமையானவர்கள். ஆனால், நீங்கள் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு விளையாட வேண்டும். அவர்கள் அனைவரும் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முயற்சித்தனர்” என்று அவர் கூறினார்.

ஏமாற்றம், மனச்சோர்வு

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றியும் அக்ரமை திருப்திப்படுத்தவில்லை. “நான் ஒரு மனிதன். மற்ற பாகிஸ்தான் ரசிகர்களைப் போலவே நானும் ஏமாற்றமாகவும், மனச்சோர்வாகவும் உணர்கிறேன்” என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராகத் தோல்வியடைந்த விதமும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராகப் போராடிய விதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் அணியை விமர்சித்த அதே நேரத்தில், அவர் இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பாராட்டவும் தவறவில்லை. குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ராவைப் பற்றிப் பேசிய அவர், “பும்ரா உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர். இந்தியா அவருடைய பணிச்சுமையைக் கையாள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில், மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவது ஒரு மனிதரால் சாத்தியமற்றது. பாகிஸ்தான் அணிக்கு இளம் வீரர்கள் தேவை. ஆனால் உடனடி முடிவுகள் கிடைக்காது, அதற்கு பொறுமை தேவை என்றும் தெரிவித்தார்.

இந்த சூழலில், வரும் செப்.21ம் தேதி சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன. அதில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் அல்லது மீண்டும் இந்தியாவின் கை ஓங்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com