

வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (SAFF Championship) தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா, இந்த முறை 28 வீரர்களைக் கொண்ட அணியைத் தேர்வு செய்துள்ளது. நவம்பர் 5-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் தனது பயணத்தைத் தொடங்கும் இந்திய அணி, தொடர்ந்து 10-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
தெற்காசிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் முக்கியமான கால்பந்து தொடரான SAFF சாம்பியன்ஷிப், இந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 17-ம் தேதி வரை வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம், இலங்கை மற்றும் பூடான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. அனைத்து போட்டிகளும் டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நௌஷாத் மூசா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 23 வயதுக்குட்பட்டோர் அணிக்குப் பயிற்சி அளித்து வரும் இவர், தற்போது சீனியர் அணியையும் இந்தத் தொடரில் வழிநடத்த உள்ளார். அவருக்கு உதவிப் பயிற்சியாளராக பிபியானோ பெர்னாண்டஸ் செயல்படுவார். இவர் சமீபத்தில் அஜர்பைஜானில் நடைபெற்ற ஃபிஃபா 15 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை மற்றும் கால்பந்து விழாவில் இந்திய அணிக்குப் பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் மூன்று கோல் கீப்பர்கள், எட்டு தடுப்பாட்ட வீரர்கள், 12 நடுகள வீரர்கள் மற்றும் ஐந்து முன்கள வீரர்கள் என மொத்தம் 28 பேர் இடம்பெற்றுள்ளனர். கோல் கீப்பர்களாக அர்ஷ் அன்வர் ஷேக், கே. மோகன்ராஜ், பிரியன்ஷ் துபே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தடுப்பாட்டப் பிரிவில் அப்துல் ரபீ, பிஜோய் வர்கீஸ், சிங்லென்சனா சிங் கொன்ஷாம், ஹ்மிங்தன்மாவியா ரால்டே, கைமின்தாங் லுங்டிம், முகமது உவைஸ், நாதன் ரோட்ரிக்ஸ், ரோனி கர்புடான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நடுகள வீரர்களாக அபிஷேக் சூர்யவன்ஷி, அடிசன் சிங் தோக்சோம், பிரிசன் பெர்னாண்டஸ், எபிந்தாஸ் யேசுதாசன், ஃபரூக் சவுத்ரி, மக்கார்டன் நிக்சன், மாங்லென்தாங் கிப்கென், நிகில் பிரபு, நௌஃபல் பி.என்., ரிக்கி ஜான் ஷபோங், சுரேஷ் சிங் வாங்ஜாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்கள வீரர்களாக இர்பான் யாத்வாத், லிஸ்டன் கொலாகோ, முகமது சுஹைல், விஷ்ணு பி.வி., சுஹைல் அகமது பட் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் அணிகளும் உள்ளன. நவம்பர் 5-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சூழல் காரணமாக இந்தப் போட்டி கூடுதல் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நவம்பர் 11-ம் தேதி அதே நேரத்தில் நடைபெறும் போட்டியில் மாலத்தீவுகளை இந்தியா சந்திக்கிறது. மற்றொரு பிரிவான குரூப் ஏ-வில் போட்டியை நடத்தும் வங்கதேசம், இலங்கை மற்றும் பூடான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நவம்பர் 14-ம் தேதி அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி நவம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற SAFF சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் குவைத் அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனாக இந்தத் தொடரில் களமிறங்குகிறது. தற்போது வரை ஒன்பது முறை இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, இந்த முறை 10-வது முறையாகக் கோப்பையை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் எம். சத்யநாராயணன், வீரர்களை அணிக்காக விடுவித்த கிளப் நிர்வாகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். போட்டிக்காக வீரர்கள் தயாராகும் பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 18 வீரர்கள் நவம்பர் 3-ம் தேதி கொல்கத்தாவில் இருந்து டாக்காவுக்குப் புறப்பட உள்ளனர். எஞ்சிய 10 வீரர்கள் அடுத்தடுத்த நாட்களில் அணியுடன் இணைவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக தெற்காசிய கால்பந்தில் இந்தியா தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இந்த முறையும் இளம் வீரர்களுக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கும் வாய்ப்பளித்து 28 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்துள்ளது. குறிப்பாக, முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள இருப்பதால் இந்திய வீரர்கள் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 10-வது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைக்குமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்