இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்...ஆரவாரத்தில் ரசிகர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, இன்று மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்த்தில் உள்ள நரேந்திர மோடி கிாிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், 2003-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த இறுதிப் போட்டியை பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸுடன் நேரில் கண்டு களிக்க உள்ளார். மேலும், உலகக் கோப்பையை வென்ற அனைத்து நாட்டு கிரிக்கெட் கேப்டன்களுக்கும் கண்டு களிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நரேந்திர மோடி மைதானத்தைச் சுற்றிலும் துணை ராணுவம் மற்றும் ஆயிரக் கணக்கில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போட்டி தொடங்குவதற்கு முன் சிறப்பு ஏற்பாடாக விமானப் படையின் வான்வெளி சாகசம், இசை நிகழ்ச்சி, லேசர் மற்றும் லைட் ஷோவும் நடைபெற உள்ளன. 

இதையடுத்து ரசிகர்கள் வசதிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து அகமதாபாத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், போட்டியில் இந்தியா வெற்றி பெற பலதரப்பட்ட மக்களும் இந்திய அணிக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கா ஆரத்தி வழிபாடு நிகழ்த்தப்பட்டது. 

சென்னையில், மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் கிரிக்கெட் போட்டியை நேரலையில் மக்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com