வங்கதேச கிரிக்கெட் அணியைப் பற்றியும், அதன் ரசிகர்களைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. டீம் ஜெயிப்பதற்கு முன்பாகவே வெற்றிப் பெற்றதாக நினைத்துக் கொண்டு ஆட்டம் போடுவது, எதிரணி வீரர்களை கேலி, கிண்டல் செய்வது, வம்பிழுப்பது, குறைப்பது என்று அவர்களின் ஆட்டம் அதிகமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் 'நாகினி டான்ஸ்' உலக ஃபேமஸ். பாம்பை போல டான்ஸ் ஆடி எதிரணி வீரர்களை அவமதிப்பது அல்லது வெறுப்பேற்றுவது அவர்களின் வேலை.
இதை ரசிகர்கள் மட்டுமல்ல.. அந்த அணியின் வீரர்கள், மேனேஜ்மென்ட்டில் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் என்று அனைவரும் மைதானத்தில் வந்து நாகினி டான்ஸ் போட்டது வரலாறு. 2016ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில், வங்கதேச அணி கடைசி ஓவரில் இந்தியாவிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறும். அதன் பிறகு, தோனி தலைமையிலான இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்கும். இந்த போட்டி முடிந்த பிறகு, அப்போது வங்கதேச விக்கெட் கீப்பராக இருந்த முஷ்ஃபிகுர் ரஹீம் தனது சமூக தளத்தில், 'இப்போது தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று பதிவிட்டு, பின்பு பலத்த எதிர்ப்பு எழுந்த காரணத்தால், அந்த பதிவையே நீக்கிய சம்பவம் எல்லாம் கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளது.
அதேபோல், வங்கதேச ரசிகர்கள் சிலர், ஃபோட்டோ ஷாப் மூலம் அப்போதைய கேப்டன் தோனியை அவமதித்து இருந்தனர். அதாவது, தோனியின் தலையை கொய்து, வங்கதேச கேப்டன் கையில் எடுத்துச் செல்வது போன்று அந்த படத்தை உருவாக்கி சமூக தளங்களில் பதிவேற்றியதும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்தியா - வங்கதேசம் மோதும் போட்டி என்றாலே, அது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை மிஞ்சிய ஒரு மனநிலையைத் தரும் என்பதே உண்மை. பலரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான் உச்சக்கட்ட க்ளாஷ் என்று நினைப்பார்கள். ஆனால், இந்தியா - வங்கதேசம் மோதும் போட்டி என்பது அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
இந்த சூழ்நிலையில், இன்று (பிப்.20) சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இவ்விரு அணிகளும் இன்று துபாயில் மோதுகின்றன. பிறகென்ன.. வங்கதேச ரசிகர்கள் இப்போதே சமூக தளங்களில் தங்கள் பதிவுகளை ஆக்ரோஷமாக வெளியிடத் துவங்கிவிட்டனர். குறிப்பாக சிலர், 'எப்படியாவது இந்திய அணியை வீழ்த்தி விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளனர். இன்னும், சிலரோ, 'நீங்கள் சாம்பியன்ஸ் டிராஃபியை ஜெயிக்கணும்-னு அவசியமில்லை. ஆனால், இந்தியாவை ஜெயித்து விடுங்கள்' என்று பதிவிட்டுளள்னர்.
ஏற்கனவே, போட்டி தொடங்குவதற்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வங்கதேச கேப்டன் ஷாண்டோ, "நாங்கள் சாம்பியன் ஆவதற்காகத் தான் சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு செல்கிறோம். இந்திய அணியை நிச்சயம் எங்களால் வீழ்த்த முடியும்" என்று கூறியிருந்த நிலையில், அவர்களது ரசிகர்களும் 'எப்படியாவது ஜெயிச்சுடு மாறா" மோடில் சமூக தளங்களை பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜெயிக்கப் போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம்.