ஐபிஎல் 2026 தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, தற்போது அடுத்தடுத்து நான்கு வெற்றிகளைக் குவித்து பிளே-ஆஃப் ரேசில் அதிரடியாகத் திரும்பியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாடு மற்றும் பின் ஆலனின் அதிரடி சதம் ஆகியவற்றால் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி அந்த அணியின் புள்ளிப் பட்டியலை உயர்த்துவதுடன், தொடரின் முக்கியமான கட்டத்தில் வீரர்களிடையே பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் இதுவரை நான்கு வெற்றிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா, ஒரு கட்டத்தில் தோல்விகளால் துவண்டிருந்தாலும், இப்போது தோல்வியே அடையாமல் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று மிரள வைத்துள்ளது.
தற்போது புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணிக்கு, லீக் சுற்றில் இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ளன. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் பொதுவாக 16 புள்ளிகள் பெற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். ஆனால், கொல்கத்தா அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டதால், அவர்களுக்குக் கூடுதலாக ஒரு புள்ளி கிடைத்துள்ளது. எனவே, மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணி 17 புள்ளிகளுடன் ரன் ரேட் கவலை இல்லாமல் நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.
கொல்கத்தா அணி தனது அடுத்த நான்கு போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), குஜராத் டைட்டன்ஸ் (GT), மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் (DC) ஆகிய பலமான அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இதில் ஒரு போட்டியில் தோற்றால் கூட அந்த அணியின் நிலைமை சிக்கலாகிவிடும். ஒரு தோல்வி அடைந்தால் அந்த அணியால் அதிகபட்சமாக 15 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். அத்தகைய சூழலில் மற்ற அணிகளுடன் புள்ளிகள் சமமாக வர வாய்ப்புள்ளதால், ரன் ரேட் அடிப்படையில் தான் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். ஆரம்பத்தில் மோசமாக இருந்த கொல்கத்தாவின் ரன் ரேட், டெல்லிக்கு எதிரான போட்டியில் 143 ரன்களை வெறும் 14.2 ஓவர்களில் எட்டியதால் தற்போது -0.169 என்ற அளவிற்கு முன்னேறியுள்ளது.
ஒருவேளை 15 புள்ளிகளுடன் கொல்கத்தா பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால், அது பெங்களூரு, குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே அமையும். மற்ற அணிகள் அதிக புள்ளிகள் பெறாமல் இருந்தால் மட்டுமே கொல்கத்தாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். எது எப்படியோ, அடுத்தடுத்து நான்கு வெற்றிகளைப் பெற்று மரண மாஸ் கம்பேக் கொடுத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல் 2026 தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.