

சதுரங்கப் பலகையை ஒரு விளையாட்டுப் பொருளாக பார்த்த சிறுமி, இன்று உலக சதுரங்க வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். வெறும் 11 வயதில் உலகின் இளம் வயது பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ள போதனா சிவானந்தன், சதுரங்க ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளார். போதனாவின் சதுரங்கப் பயணம் திட்டமிட்டு தொடங்கியது அல்ல. கொரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, குடும்ப நண்பர் ஒருவர் சில பொருட்களுடன் சதுரங்கப் பலகையையும் அவரது வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது 5 வயதாக இருந்த போதனா, சதுரங்கக் காய்களைப் பார்த்து ஆர்வம் கொண்டார். இணையதள காணொளிகள் மூலம் காய்கள் எப்படி நகரும் என்பதைத் தானாகவே கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அதன்பிறகு சதுரங்கம் அவரது வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக மாறியது.
சிறு வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய அவர், தொடர்ந்து பல சாதனைகளை படைத்தார். 2022-ம் ஆண்டு ஐரோப்பிய பள்ளிகள் சாம்பியன்ஷிப்பில் தனது வயதுப் பிரிவில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். பின்னர் பெரியவர்களுடன் நடைபெறும் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார். 2023-ம் ஆண்டில் ஒரு கிராண்ட்மாஸ்டருக்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வியின்றி விளையாடியிருந்தார். போதனாவின் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் வேகமெடுத்தது. 2026-ம் ஆண்டு பிரிட்டிஷ் மகளிர் சதுரங்க சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று, அந்தப் போட்டியில் மிக இளம் வயதில் பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார். இதன் மூலம் ஏற்கெனவே சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்த அவரது பெயர் மேலும் பரவியது.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாக அமைந்தது. இங்கிலாந்து அணிக்காக விளையாடிய போதனா, போட்டியின் 11 சுற்றுகளிலும் அணியின் முதல் பலகையில் களமிறங்கினார். பொதுவாக அணியின் வலுவான வீரர் விளையாடும் இடமாக முதல் பலகை கருதப்படுகிறது. 11 ஆட்டங்களில் மொத்தம் 8 புள்ளிகளைப் பெற்ற அவர், தனது மூன்றாவது மற்றும் இறுதி பெண் கிராண்ட்மாஸ்டர் தகுதிக்கான விதிமுறையையும் நிறைவு செய்தார். இதன் மூலம் 11 வயதில் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனை அவருக்கு கிடைத்தது.
இதற்கு முன்பு கதெரினா லக்னோ மற்றும் சீனாவின் முன்னாள் உலக சாம்பியனான ஹூ யிஃபான் ஆகியோர் 12 வயதில் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றிருந்தனர். அந்த சாதனையை தற்போது போதனா முறியடித்துள்ளார். ஆனால், பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் முழுமையான கிராண்ட்மாஸ்டர் என்பது இரண்டு வெவ்வேறு பட்டங்கள். முழுமையான கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை 14 வயதில் பெற்ற ஹூ யிஃபான், அந்த சாதனையில் இன்னும் மிக இளம் வீராங்கனையாக உள்ளார்.
போதனாவின் சாதனை இத்துடன் முடிவடையவில்லை. சர்வதேச மாஸ்டர் பட்டத்தை நோக்கிய பயணத்திலும் அவர் வேகமாக முன்னேறி வருகிறார். சமீபத்திய போட்டியில் கிடைத்த மற்றொரு சர்வதேச மாஸ்டர் தகுதி விதிமுறை, அந்த இலக்கை நோக்கி அவரை மேலும் நெருக்கமாக கொண்டு சென்றுள்ளது. இதற்கு முன்பே 11 வயதில் சர்வதேச மாஸ்டர் தகுதி விதிமுறையைப் பெற்ற இளம் பெண் என்ற மற்றொரு சாதனையையும் அவர் படைத்திருந்தார். இத்தனை சாதனைகளுக்கு நடுவிலும் போதனா இன்னும் முழுநேர பள்ளி மாணவிதான். சர்வதேச போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால், படிப்பைத் தொடர அவரது பள்ளி நெகிழ்வான அட்டவணையை வழங்கி வருகிறது. போட்டிகளுக்காக தவறவிடும் பாடங்களை பின்னர் படித்து முடித்து வருகிறார்.
தனது சாதனை குறித்து போதனா அதிக அழுத்தத்தை உணரவில்லை என்றும், ஒவ்வொரு போட்டியையும் ரசித்து விளையாடுவதாகவும் கூறியுள்ளார். மேலும், இத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து விளையாடி புதிய வரலாறு படைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சதுரங்கப் பலகையை விளையாட்டுப் பொருளாக பார்த்த 5 வயது குழந்தை, வெறும் ஆறு ஆண்டுகளில் உலக சாதனை படைத்திருப்பது அவரது திறமையையும் தொடர்ந்து செய்த பயிற்சியையும் காட்டுகிறது. இன்னும் பள்ளிப் பருவத்திலேயே இருக்கும் போதனாவின் அடுத்த இலக்கு என்னவாக இருக்கும் என்பதுதான் தற்போது சதுரங்க உலகம் எதிர்பார்க்கும் கேள்வியாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்