

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. வெறும் 14 வயதே ஆன இளம் வீரர் ஒருவர், சர்வதேச ஜாம்பவான்களையே வியக்க வைக்கும் வகையில் 36 பந்துகளில் சதம் விளாசி உலகச் சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி என்ற அந்தச் சிறுவன் தான், தற்போது கிரிக்கெட் உலகின் பேசுபொருளாக மாறியுள்ளார். விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்த இமாலயச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் அனல் பறந்தது. எதிரணிப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த அவர், மைதானத்தின் அனைத்துத் திசைகளிலும் பந்துகளைச் சிதறடித்தார். வெறும் 36 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம், உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் (List A Cricket) மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக பஞ்சாப் வீரர் அன்மோல்பிரீத் சிங் 35 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரே ஒரு பந்து மட்டுமே அதிகமாகத் தேவைப்பட்டது.
மேலும், இந்தப் போட்டியில் அவர் 84 பந்துகளில் மொத்தம் 190 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 15 சிக்ஸர்களும், 16 பவுண்டரிகளும் அடக்கம். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த மிக இளைய வீரர் (14 வயது) என்ற உலகச் சாதனையை அவர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவானான ஏபி டிவில்லியர்ஸ் வைத்திருந்த சாதனையையும் இவர் தகர்த்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ரன்களைக் கடந்திருந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி வெறும் 54 பந்துகளிலேயே 150 ஓட்டங்களைக் கடந்து புதிய உலகச் சாதனையைப் படைத்துள்ளார். இரட்டைச் சதத்தை நெருங்கிய வேளையில் அவர் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், அவரது இந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சோபிக்கத் தவறியதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனங்களுக்கெல்லாம் தனது பேட் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார் இந்த இளம் சிங்கம். 14 வயதிலேயே முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர், இந்திய கிரிக்கெட்டின் வருங்கால சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்று பலரும் கணித்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தபோது, பலர் புருவத்தை உயர்த்தினர். ஆனால், தனது திறமை என்னவென்பதை விஜய் ஹசாரே கோப்பையின் முதல் போட்டியிலேயே நிரூபித்துக் காட்டியுள்ளார். சிறு வயதிலேயே ரஞ்சி கோப்பை, தற்போது விஜய் ஹசாரே கோப்பை எனப் பெரிய தொடர்களில் கலக்கி வரும் வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்களின் ஆரம்பகால சாதனைகளை முறியடித்து முன்னேறி வருகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்