

நேற்றைய ஐபிஎல் போட்டியில்,சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வலுவான இலக்கை அமைத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். குறிப்பாக அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து, 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். இதன் மூலம், ஹைதராபாத் அணிக்காக 100 சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மேலும், காலீசன் இறுதி வரை நின்று இன்னிங்ஸை வலுப்படுத்தினார். நிதிஷ் குமார் ரெட்டியும் முக்கிய பங்களிப்பு செய்தார். இதன் மூலம் ஹைதராபாத் அணி 227 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணி, பவர் பிளேயில் 74 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் பெற்றது. ஆனால் மிடில் ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணிக்கு அழுத்தம் அதிகரித்தது மற்றும் இறுதியில் தோல்வியை சந்திக்க வேண்டியதாகியது.
போட்டிக்குப் பிறகு பேசிய ரஹானே, “முதல் 6 ஓவர்களில் நாங்கள் நல்ல தொடக்கம் பெற்றோம். ஆனால் கேமரூன் க்ரீன் ரன் அவுட் ஆனது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. பெரிய இலக்கை விரட்டும்போது மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியம், அது எங்களுக்கு அமையவில்லை” என்று கூறினார். மேலும் அவர், “இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சற்று மாறுபட்டது. பந்து பேட்டிற்கு தாமதமாக வந்தது. ஆனால் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் இந்த நிலையை பயன்படுத்தி ஸ்லோவர் பந்துகளை சிறப்பாக வீசினர். இருப்பினும் இதை தோல்விக்கான காரணமாக சொல்ல விரும்பவில்லை” என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய இஷான் கிஷன் “தொடக்க வீரர்களின் அதிரடி பேட்டிங்கே முக்கிய காரணம்” என அவர் பாராட்டினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.