ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், 15 வயதே ஆன இளம் வீரன் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து தான் பயந்துவிட்டதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். டெல்லி அணிக்கு பெரும் சவாலாக இருந்த வைபவ்வை, ஜேமிசன் ஆரம்பத்திலேயே அவுட் செய்தாலும், அதன் பிறகு அவர் காட்டிய ஆக்ரோஷமான கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக ஐபிஎல் நிர்வாகம் அவருக்குக் கண்டனம் தெரிவித்து அபராதமும் விதித்துள்ளது. போட்டிக்குப் பிறகு பேசிய ஜாமிசன், ஒரு 15 வயது சிறுவனைப் பார்த்து தான் இந்த அளவுக்குப் பயந்தது இதுவே முதல் முறை என்று பாராட்டியுள்ளார்.
ஜேமிசன் வீசிய துல்லியமான யார்க்கர் பந்துதான் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அவர் ஆட்டமிழந்த பிறகு டெல்லி அணிக்கு ஒரு நல்ல பிடிமானம் கிடைத்தாலும், அதன் பிறகு வந்த ரியான் பராக், துருவ் ஜூரல் மற்றும் டொனோவன் ஃபெரைரா ஆகியோர் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை 225 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ஐபிஎல் இணையதளத்தில் வெளியான வீடியோவில் பேசிய ஜேமிசன், "என் வாழ்க்கையில் இதுவரை எந்த 15 வயது சிறுவனைப் பார்த்தும் இவ்வளவு பயந்ததில்லை. இந்தப் போட்டிக்கு முன்னதாகவே வைபவ்வை அவுட் செய்ய நாங்கள் சில திட்டங்களைப் போட்டிருந்தோம், அது பலன் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் அணியின் பலமே அதன் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி தான். அவர்கள் இருவரும் அதிரடியாகத் தொடங்கி ரன்களைக் குவிப்பதில் வல்லவர்கள். அவர்களை ஆரம்பத்திலேயே அவுட் செய்வது தான் எங்களின் முக்கிய திட்டமாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும், நான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதால் பவர் பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ரன் வேகத்தை எங்களால் ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது என்றார்.
காயமடைந்த லுங்கி நிகிடிக்கு மாற்றாக டெல்லி அணியில் இணைந்த கைல் ஜேமிசன், தனது புதிய பந்துவீச்சு பார்ட்னரான மிட்செல் ஸ்டார்க்கை வெகுவாகப் புகழ்ந்தார். ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளரான ஸ்டார்க் இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஸ்டார்க் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர், அவர் எங்களுடன் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். புள்ளிகள் பட்டியலில் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த எங்களுக்குச் சரியான நேரத்தில் அவர் வந்து உதவியுள்ளார். அவருடன் இணைந்து புதிய பந்தில் பந்துவீசுவது ஒரு சிறப்பான அனுபவம் என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்