
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பிறகு வெளியிட்ட கருத்து தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
செப்டம்பர் 14 அன்று ஆசியக் கோப்பை குரூப் A போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, போட்டி முடிந்தபின் நடந்த உரையாடலிலும் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சூர்யகுமார் யாதவ் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது அவர், ஏப்ரல் மாதம் நடந்த பால்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்திய அணியின் இந்த வெற்றியைச் சமர்ப்பிப்பதாக அறிவித்தார். மேலும், "ஆபரேஷன் சிந்தூர்"-இல் ஈடுபட்டுள்ள இந்திய ஆயுதப் படைகளுக்கு (ராணுவம்) இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
"இது ஒரு சரியான தருணம். நாங்கள் பால்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் உறுதுணையாக நிற்கிறோம். நாங்கள் எங்கள் வீரதீரத்தைக் காட்டிய ஆயுதப் படைகளுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறோம்." என்றார்.
இதற்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இருந்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், "எங்கள் அரசும் பிசிசிஐயும் ஒரே நிலையில் இருந்தன. நாங்கள் இங்கு விளையாடுவதற்காக மட்டுமே வந்தோம். வாழ்க்கையில் விளையாட்டு மனப்பான்மையை விட சில விஷயங்கள் முக்கியமானவை" என்றும் தெரிவித்தார்.
சூர்யகுமார் யாதவின் இந்த அறிக்கைகள், விளையாட்டுக் களத்தில் அரசியல் மற்றும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களைத் திணிப்பதாகவும், இது ஐசிசி நடத்தை விதிகளின் நடுநிலைமைக் கொள்கைக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் புகாரை ஐசிசி ஏற்றுக்கொண்டு, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்த விவகாரத்தைக் கையாளுவார் என்று நியமிக்கப்பட்டுள்ளார். ரிச்சி ரிச்சர்ட்சன், சூர்யகுமார் யாதவ் அளித்த இந்தப் பேச்சுகளுக்கு விளக்கம் கோரி இந்திய அணியின் நிர்வாகத்திற்கு இ-மெயில் அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் சமர்ப்பித்த அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த ரிச்சர்ட்சன், சூர்யகுமார் யாதவின் கருத்துக்கள் "விளையாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பொருத்தமற்ற கருத்துக்கள்" என்று முடிவு செய்து, இந்திய கேப்டன் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.