

அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பைத் தொடரை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இத்தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது. இந்தத் தோல்விகளின் போதும், சில பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் 6-0 என்ற சைகையைக் காட்டியது பெரும் சர்ச்சையானது. அதாவது, 6 இந்திய போர் விமானங்களை வீழ்த்திவிட்டதாக தானாகவே கூறிக் கொள்ளும் பாகிஸ்தானின் சுய பெருமையை பேசும் விதமாக, '6-0' என்று விரல்களைக் காட்டி இந்திய ரசிகர்களை நோக்கியும், இந்திய வீரர்களை நோக்கியும் சீண்டும் விதமாக பாக்., வீரர் ஹாரிஸ் ரவுஃப் நடந்து கொண்டார். எனினும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
ஆசியக் கோப்பை தொடர்களில் அடைந்த ஏமாற்றத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி தற்போது சொந்த நாட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி, ராவல்பிண்டியில் நேற்று நடந்தது. கேப்டன் சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் எப்படியாவது வென்று தங்கள் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. பொதுவாக ராவல்பிண்டி மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால், இந்த முடிவை பாகிஸ்தான் அணி எடுத்தது.
ஆனால், களத்தில் ஆட்டம் தொடங்கிய போது நிலைமை வேறு விதமாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் அதிரடியாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான க்வின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மிகவும் சிறப்பாக விளையாடினார். ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி, பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தானின் அனுபவ சுழல் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் தனது சிறப்பான பந்துவீச்சால் விக்கெட் வேட்டையைத் தொடங்கினார். அவர் முக்கியமான வீரர்களான டோனி டி சோர்சி மற்றும் டீவால்ட் பிரெவிஸ் ஆகியோரை வெளியேற்றினார். அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நவாஸின் இந்த பந்துவீச்சு (3 விக்கெட்டுகள்) மிகவும் உதவியது. தென் ஆப்பிரிக்க அணியின் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 60 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஜார்ஜ் லிண்டேவின் அதிரடி பேட்டிங் (36 ரன்கள்) உதவ, தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தானுக்கு வெற்றி பெற 195 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த சவாலான இலக்கை சேஸ் செய்யக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. அணியின் தொடக்கம் மிகவும் பலவீனமாக இருந்தது. முக்கியமாக, நட்சத்திர ஆட்டக்காரரான பாபர் ஆசாம், தான் மீண்டும் டி20 அணிக்குத் திரும்பிய முதல் போட்டியிலேயே, வெறும் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து, டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதன் பிறகு சல்மான் ஆகா தலைமையிலான மத்திய வரிசை வீரர்கள் அனைவரும் தென் ஆப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். இளம் வேகப்பந்துவீச்சாளர் கார்பின் பாஷ் (4 விக்கெட்டுகள்) மற்றும் சுழல் பந்துவீச்சாளர் ஜார்ஜ் லிண்டே (3 விக்கெட்டுகள்) கூட்டணி அமைத்து பாகிஸ்தான் பேட்டிங் வரிசையைச் சிதைத்தது. இதில் லிண்டே பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியில் சயீம் அய்யூப் (37 ரன்கள்) மற்றும் முகமது நவாஸ் (36 ரன்கள்) ஆகியோர் மட்டுமே சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடினர். குறிப்பாக, நவாஸ் கீழ் வரிசையில் வந்து அதிரடியாக ஆடினாலும், மற்ற வீரர்களிடமிருந்து அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி வெறும் 18.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 139 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாகவோ அல்லது ஓய்வு காரணமாகவோ அணியில் இல்லாத போதிலும், ஒரு இளம் அணி சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.