ஐபிஎல் தொடரை உலுக்கும் 57 கோடி ரூபாய் நஷ்டம்! ஸ்டார் வீரர்கள் விலகலால் 10 அணிகளும் அதிர்ச்சி - என்ன நடக்கிறது?

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியிருந்தது. ஆனால், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான அரசியல் சூழல் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.
ஸ்டார் வீரர்கள் விலகலால் 10 அணிகளும் அதிர்ச்சி
ஸ்டார் வீரர்கள் விலகலால் 10 அணிகளும் அதிர்ச்சிஸ்டார் வீரர்கள் விலகலால் 10 அணிகளும் அதிர்ச்சி
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 2026 சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 50 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு அனைத்து அணிகளையும் வாட்டி வதைக்கும் ஒரு பொதுவான பிரச்சனை வீரர்களின் வருகைதான். காயம், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் நாட்டின் நலன் கருதி பல முக்கிய வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே விலகியுள்ளனர். இவ்வாறு விலகிய வீரர்களின் ஏலத் தொகையை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 57.6 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இந்தத் தொகையானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு ஏலத்தின் போது வைத்திருந்த மொத்த தொகையான 64.30 கோடி ரூபாய்க்கு நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணிக்கு ஹர்ஷித் ராணா மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோரின் இழப்பு பலத்த அடியாக விழுந்துள்ளது. 4 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட ஹர்ஷித் ராணா முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக விலகியுள்ளார். அதேபோல், 18 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர் மதீஷா பத்திரனா, உடல்நிலை கோளாறு காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை, சிஎஸ்கே அணியிலிருந்து டிரேடு செய்யப்பட்டு வந்த சாம் கர்ரன் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த விவகாரத்தில் தப்பவில்லை. கலீல் அகமது மற்றும் நேதன் எல்லிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது அணியின் திட்டங்களைச் சிதறடித்துள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா காயத்தால் பல போட்டிகளில் விளையாடவில்லை. நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் தோள்பட்டை காயம் காரணமாகத் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களின் வருகையும் இந்த முறை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் சில போட்டிகளுக்குப் பிறகே அணியில் இணைந்தனர். கேமரூன் கிரீன் போன்ற வீரர்களின் பந்துவீச்சிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வீரர்கள் விலகியதற்கான காரணங்கள் வெறும் காயங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியிருந்தது. ஆனால், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான அரசியல் சூழல் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார். அதேபோல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகினார். இத்தகைய அதிரடி மாற்றங்களால் பல அணிகள் தங்கள் வீரர்களின் கலவையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com