
இந்தியக் கிரிக்கெட்டின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட பிரித்வி ஷா, இப்போது மீண்டும் சரியான டிராக்குக்கு திரும்பி வருகிறார். 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாதது, மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டது எனப் பல சவால்களைச் சந்தித்த ஷா, 2025-26 சீசனுக்காக மகாராஷ்டிரா அணிக்கு மாறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற புச்சி பாபு அழைப்புத் தொடரில், ஷா ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.
பிரித்வி ஷாவின் மறுவருகை:
இதுகுறித்து மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்வாளர் அக்ஷய் தாரேகர் ஒரு நேர்காணலில் பேசுகையில், "பிரித்வி சரியான பாதையில் இருக்கிறார். அவரது பேட்டிங்கில் ஒருபோதும் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. அவர் இப்போது மீண்டும் கவனம் செலுத்தி, தனது பேட்டிங் மூலம் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்த ஆர்வமாக இருக்கிறார். அவர் தனது உடற்தகுதியிலும் முழுமையாக கவனம் செலுத்தி, தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார்," என்றார்.
புச்சி பாபு தொடரில் ஷாவின் ஆட்டம் கலவையாக இருந்தது. சில போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும், சத்தீஸ்கருக்கு எதிராக 111 ரன்கள் அடித்து, தனது திறமையை நிரூபித்தார். பின்னர், டிஎன்சிஏ பிரசிடென்ட் XI அணிக்கு எதிராக 66 ரன்கள் அடித்து, தனது பேட்டிங் திறமை இன்னும் குறையவில்லை என்பதைக் காட்டினார்.
சச்சின் டெண்டுல்கர் Vs ஷுப்மன் கில்
2024-ஆம் ஆண்டு, மும்பையின் சையத் முஷ்டாக் அலி டிராபி அணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், அவரது ஒழுக்கம் குறித்து அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விமர்சித்திருந்தார். "அவர் தனது வேலை ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும். அதைச் செய்தால், அவருக்கு எந்த எல்லையும் இல்லை" என்று ஐயர், ஷாவைப் பற்றிப் பேசியிருந்தார்.
மஹாராஷ்டிரா, மும்பை அணியை விட பலம் குறைந்த அணியாக இருந்தாலும், ரஞ்சி டிராபியின் நாக் அவுட் சுற்றுக்கு அணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே ஷாவின் நோக்கம் என்று அக்ஷய் தாரேகர் கூறினார். "அவர் எப்போதும் ஆக்ரோஷமாக விளையாட விரும்புகிறார். புச்சி பாபு தொடரில் மஹாராஷ்டிராவிற்காக அவர் ஆடிய இரண்டு போட்டிகளிலும் அவரது திறமை வெளிப்பட்டது. அவர் பெரிய ரன்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறார். அவரது சிறந்த ஆட்டத்தின் மூலம் மஹாராஷ்டிராவை ரஞ்சி நாக் அவுட் சுற்றுக்கு அழைத்துச் செல்வதே எங்கள் இலக்கு" என்று தாரேகர் தெரிவித்தார்.
பிரித்வி ஷாவின் சர்வதேசப் பயணம்:
2018-ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். ஆனால், அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
அவர் கடைசியாக ஜூலை 2021-இல் இந்திய அணிக்காக விளையாடினார்.
ஒரு காலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ₹7.5 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட ஷா, ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ₹75 லட்சம் அடிப்படை விலையில் விலைபோகாமல் போனது.
அனைத்து தடைகளையும் கடந்து, பிரித்வி ஷா மீண்டும் தனது ஃபார்முக்குத் திரும்பி, தனது திறமையை நிரூபித்துள்ளார்.. தொடர்ந்து நிரூபிப்பார் என நம்பலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.