"ராகுல் டிராவிட் தான் என்னை மீட்டெடுத்தார்!" - கேப்டன் பொறுப்புக்கு பின் நடந்த உண்மைகளைத் தோலுரித்த விராட் கோலி!

எத்தகைய அழுத்தம் இருந்தாலும், மீண்டும் ஒருமுறை கேப்டன் பதவி வழங்கப்பட்டால்...
"ராகுல் டிராவிட் தான் என்னை மீட்டெடுத்தார்!" - கேப்டன் பொறுப்புக்கு பின் நடந்த உண்மைகளைத் தோலுரித்த விராட் கோலி!
Published on
Updated on
2 min read

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி திடீரென விலகியது, பல ரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏழு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி 40 வெற்றிகளைப் பெற்ற கோலி, ஏன் அந்தப் பதவியை விட்டு விலகினார் என்பதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கோலி, அப்போதைய தனது மனநிலையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். கேப்டன் பதவி தன்னை மனதளவில் எவ்வளவு சோதித்தது என்பதை அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, பேட்டிங் செய்வது மற்றும் அணியை வழிநடத்துவது என இரண்டு பெரிய பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனித்ததாக கோலி கூறினார். "இந்திய கிரிக்கெட்டை எப்படியாவது நம்பர் 1 இடத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற வெறியில் நான் இருந்தேன். அந்த உத்வேகத்தில், கேப்டன் பொறுப்பு என் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதை நான் கவனிக்கவே இல்லை. இறுதியில் கேப்டன் பதவியை விட்டு விலகும்போது, நான் மனதளவில் முற்றிலும் டயர்ட் ஆகிவிட்டேன். அந்தப் பொறுப்பு என்னைச் சொல்ல முடியாத அளவுக்கு அழுத்தியது. எப்போதுமே எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருந்தது" என்று கோலி தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போதைய அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனக்கு பெரிய ஆதரவாக இருந்ததாகவும், அணியில் எந்தவிதமான பாதுகாப்பற்ற உணர்வும் வராமல் அவர்கள் பார்த்துக் கொண்டதாகவும் கோலி தெரிவித்தார். ஆனால், விளையாட்டில் ஃபார்ம் (Form) குறையும்போது, கேப்டன் பதவியின் அழுத்தம் பல மடங்கு கூடிவிடுவது தமக்குத் தாங்க முடியாததாக இருந்தது என்று அவர் ஒப்புக்கொண்டார். கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகுதான், தன்னால் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் போன்றவர்களிடம் மனசு விட்டுப் பேச முடிந்தது என்றும், அந்த இக்கட்டான சமயத்தில் அவர்கள் தான் தமக்குக் கைகொடுத்தார்கள் என்றும் கூறினார்.

"நான் கேப்டன் பதவியை விட்டு விலகிய பிறகுதான், ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோரிடம் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். 2023-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடியதற்கு அவர்கள்தான் முக்கியக் காரணம். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் இப்போதும் நான் மனதார நன்றி சொல்வேன். நான் மீண்டும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தை அவர்கள் தான் எனக்குக் கொடுத்தார்கள். நான் எதற்காக விளையாடுகிறேன், நான் இதுவரை என்ன சாதித்திருக்கிறேன் என்பதை எனக்குப் புரிய வைத்தது அவர்கள் தான்" என்று கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

20 ஆண்டுகால அனுபவம் இருந்தாலும், இப்போதும் பயிற்சியின் போது இளைஞர்களைப் பார்க்கும்போது தனக்குள் ஒரு சிறு சந்தேகம் (Imposter Syndrome) வரும் என்று கோலி வெளிப்படையாகச் சொன்னார். எத்தகைய அழுத்தம் இருந்தாலும், மீண்டும் ஒருமுறை கேப்டன் பதவி வழங்கப்பட்டால் அதே கடமையுணர்வுடன் செயல்படுவேன் என்று கூறும் அவர், தற்போது மன அழுத்தங்கள் எதுவுமின்றி கிரிக்கெட்டை முழுமையாக ரசித்து விளையாடி வருவதாகத் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com