
18 ஆவது ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வெற்றி பெற்று தந்து 18 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்துக்கொண்டது. என்றேனும் ஒருநாள் கோப்பை வெல்வோம் என்ற கனவுடன் அணியின் மூத்த வீரரான விராட் கோலியும் 18 ஆண்டுகளாக அந்த அணியிலேயே தங்கிவிட்டார். பல அவமானங்கள் தோல்விகளை கடந்துதான் ஆர்.சி.பி இன்று இந்த வெற்றியை சுவைக்கிறது. ஆனால் அந்த சந்தோசம் வெகு நேரத்திற்கு நீடிக்கவில்லை என்பதே நிதர்சனம்.
ஆனால் மிகப்பெரும் வரலாற்று கொண்டாட்டமாக மாறியிருக்க வேண்டிய ஒரு நிகழ்வு பெரும் துயரத்தையும் அவப்பெயரையும் அளித்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் (ஜூன் 4) கோப்பையை வென்ற ஆர்சிபி -யை வரவேற்க பிரம்மாண்ட கோலாகல ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டது. பெங்களூரு வந்த ஆர்.சி.பி. அணி வீரர்களை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
அதுமட்டுமின்றி துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் காரில் ஆர்.சி.பி கோடியை பறக்கவைத்துக்கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
ஸ்தம்பித்த சின்னசாமி மைதானம்!
ஆர்.சி.பி வெற்றியை கொண்டாட அம்மாநில முதல்வர் அவசரகதியில் ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவை மைதானமான விதான் சவுஹானில் இருந்து துவங்கி சின்ன சாமி மைதானம் வரை சுமார் 2.கி.மீ தூரத்துக்கு பேருந்துகளின் மூலம் ஆர்.சி.பி வீரர்கள் பயணம் செய்தனர். அப்போது செல்லும் வழி எங்கும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர். சொல்லப்போனால் அங்கிருந்தே கூட்டம் களைகட்ட துவங்கியுள்ளது.
இன்னும் ஆயிரக்கணக்கானோர் சின்ன சாமி மைதானத்துக்குள்ளாகவே சென்று இருக்கையை பிடித்துக்கொண்டனர். இந்நிலையில்தான் சின்னசாமி மைதானம் வெளியேயும் உள்ளேயும் நிரம்பி வழிந்தது.
நெரிசலில் சிக்கி..
இந்த நிலையில்தான் மைதானத்துக்குள் பாராட்டு நிகழ்ச்சி துவங்கி கோலாகலமாக நடந்தது. ஆனால் வெளியில் மக்கள் நெரிசலில் முட்டிமோதி உள்ளே செல்ல முயற்சித்தனர். அப்போதுதான் கேட் ஒன்று திடீரென திறக்கப்பட்டது, உடனே தடுப்பு சுவர்களை தண்டி பலர் ஒரே கேட்டின் வழியே செல்ல முயன்றபோது நெரிசலில் சிக்கி பல பேர் சம்பவ இடத்திலே மயங்கினர். இந்நிலையில்தான் குழந்தை உட்பட 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்றும் நம்பப்படுகிறது.
குழப்பத்தில் நடந்த கொண்டாட்டம்
இந்த வெற்றிகொண்டாட்டத்தின் அப்டேட் குறித்து காலையிலிருந்தே முன்னுக்கு பின் முரணான தகவல்களே வெளிவந்த வண்ணம் இருந்தன. முதலில் ரோட் ஷோ கிடையாது என்றார்கள், பின்னர் உண்டு என்றார்கள், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும் அதனால் கொண்டாட்டம் தவிர்க்கப்படும் என்றார்கள். இப்படி பல. டிக்கெட் எடுக்க வேண்டுமா? இல்லை இலவச நுழைவா என்பது தெரியாமல் பலர் குழம்பி திரிந்தனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே பாஸ் வைத்திருந்தவர்களுக்கு உள்ளே இடம் கிடைக்கவில்லை. காரணம் பல பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் ஏற்கனவே தங்கள் அதிகாரத்தை வைத்து பல இருக்கைகளை அக்கிரமித்ததாக ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மெட்ரோவில் ரசிகர்கள் அமளி!
இந்த நெரிசலில் இருந்து மீண்ட ரசிகர்கள் வீடு திரும்புவதற்காக மெட்ரோவை நோக்கி படையெடுத்தனர். ஆனால் சின்னசாமி ஸ்டேடியம் அதனை சுற்றியுள்ள மெட்ரோக்கள் மூடப்பட்டு இருந்தன. முன்னறிவிப்பு ஏதும் இல்லாததால், மெட்ரோவை திறக்க சொல்லி ரசிகர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மனிதாபிமான தோல்வி
இத்துணை களேபரங்களுக்கு இடையிலும் எந்த சலனமும் இன்றி மைதானத்துக்குள் வெற்றிகொண்டாட்டம் நடந்தது மனிதாபிமானமற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றன. மேலும் அவசரகதியில் மாநில முதல்வரும் துணை முதல்வரும் முண்டியடித்துக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டது என்? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
எது எப்படி இருந்தாலும் இதில் பாதிப்பு, இழப்பு அனைத்துமே ரசிகர்களுக்குத்தான், இத்தகு பெருங்கூட்டம் கூடும் இடங்களுக்கு குழந்தைகளையாவது கூடி செல்லாமல் இருந்திருக்கலாம். இந்த வெற்றியால் ரசிகர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பதே நிதர்சனம்.உண்மையில் உயிரைவிட எந்த வெற்றியும் பெரிதல்ல..!