
கிரிக்கெட் உலகின் 'கடவுள்' எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஜோ ரூட் மற்றும் சமீபத்தில் ஓய்வுபெற்ற சேதேஷ்வர் புஜாரா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை, இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் முறியடிப்பாரா என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், சச்சின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, ஜோ ரூட் 13,543 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க ரூட்டுக்கு இன்னும் 2378 ரன்கள் மட்டுமே தேவை.
ஜோ ரூட் குறித்து சச்சினின் பாராட்டு
சமீபத்தில் ஒரு இணையதள கேள்வி-பதில் அமர்வில், சச்சினிடம் “ஜோ ரூட்டைப் பற்றி உங்களின் முதல் எண்ணம் என்ன? அவர் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்து, உங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். நீங்கள் இருவரும் அவருக்கு முதல் போட்டியில் எதிராக விளையாடினீர்கள்” என்று ஒரு ரசிகர் கேட்டார்.
இதற்கு சச்சின் அளித்த பதில்:
“13,000 ரன்களைக் கடந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அவர் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் முதன்முதலில் 2012-ஆம் ஆண்டு நாக்பூரில் தனது முதல் டெஸ்டில் விளையாடியபோது, அவர் இங்கிலாந்தின் எதிர்கால கேப்டன் என்று எனது அணி வீரர்களிடம் கூறினேன். அவர் விக்கெட்டைப் புரிந்துகொண்டு, ஸ்டிரைக்கை சுழற்றிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்திலேயே அவர் ஒரு பெரிய வீரராக வருவார் என்பதை நான் உணர்ந்தேன்” என்று புகழாரம் சூட்டினார்.
மறுபுறம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சேதேஷ்வர் புஜாராவின் ஓய்வு, பலரின் பாராட்டுகளைப் பெற்றது. அந்த வரிசையில், 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரும் புஜாராவின் 15 ஆண்டுகால சிறப்பான பங்களிப்புக்காக ஒரு சிறப்புப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
பாரம்பரியமான டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த புஜாரா, அக்டோபர் 2010-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்து X சமூக வலைத்தளத்தில் சச்சின் எழுதியுள்ளதாவது:
"புஜாரா, நீங்கள் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது அது ஒரு நிம்மதியைத் தரும் தருணம். ஒவ்வொரு முறையும் நீங்கள் விளையாடியபோது அமைதி, துணிச்சல் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தினீர்கள். அழுத்தமான தருணங்களில் உங்களின் திடமான நுட்பம், பொறுமை மற்றும் நிதானம் ஆகியவை அணிக்கு ஒரு தூணாக அமைந்தன.”
புஜாராவின் பல சிறப்பான இன்னிங்ஸ்களில், 2018-19-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி மிகவும் முக்கியமானது. அந்த தொடரில் அவர் 1258 பந்துகளை எதிர்கொண்டு, 74.42 என்ற சராசரியில் 521 ரன்கள் குவித்தார். இது அந்தத் தொடரில் அதிகபட்ச ரன்களாகும்.
அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 19/3 என்று தடுமாறியபோது, தனது முதல் டெஸ்ட் சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் அடித்து அணியைக் காப்பாற்றினார். சச்சினின் கூற்றுப்படி, புஜாரா இல்லாமல் அந்த 2-1 என்ற தொடர் வெற்றி சாத்தியமாகி இருக்காது.
“பல சிறந்த இன்னிங்ஸ்களில், 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பெற்ற தொடர் வெற்றி தனித்துவமானது. உங்களின் நம்ப முடியாத நிதானம் மற்றும் ஆட்டத்தை மாற்றிய ரன்கள் இல்லாமல் அது சாத்தியமாகியிருக்காது. உங்களின் அற்புதமான பயணத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமையட்டும்! உங்களின் இரண்டாவது இன்னிங்ஸை அனுபவித்து மகிழுங்கள்!” என்று சச்சின் தனது பதிவை முடித்திருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.