ஷேன் வார்னே போட்ட ஒரு கையெழுத்து.. 18 வருடம் கழித்து குடும்பத்திற்கு கிடைக்கப்போகும் 450 கோடி ரூபாய் அதிர்ஷ்டம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்று உலக அளவில் மிகப்பெரிய மதிப்புள்ள ஒரு அணியாக உயர்ந்து நிற்கிறது...
Shane Warne's
Shane Warne's
Published on
Updated on
2 min read

கிரிக்கெட் உலகில் சுழற்பந்து வீச்சில் மந்திரவாதியாகத் திகழ்ந்தவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. அவர் மைதானத்தில் பந்து வீசினால் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்து போவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மைதானத்திற்கு வெளியேயும் அவர் ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசியாக இருந்திருக்கிறார் என்பதற்கு இப்போது ஒரு மிகப்பெரிய சாட்சி கிடைத்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் முதன்முதலில் தொடங்கப்பட்டபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஷேன் வார்னே பொறுப்பேற்றார். அப்போது அவர் போட்ட ஒரு ஒப்பந்தம், இன்று 18 ஆண்டுகள் கழித்து அவரது குடும்பத்திற்குப் பல நூறு கோடி ரூபாய்களை வாரி வழங்கக் காத்திருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் சாதாரணமான ஒரு அணியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியை வழிநடத்த வார்னேவிடம் ஒரு முக்கியமான ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, வார்னே அந்த அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், பயிற்சியாளராகவும், அணியின் முழு நிர்வாகத்தையும் கவனிப்பவராகவும் செயல்பட்டார். இதற்காக அவருக்குச் சம்பளத்தைத் தாண்டி ஒரு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது. அதாவது, அவர் அந்த அணியில் விளையாடும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 0.75 சதவீத பங்குகள் (Shares) அவருக்கு உரிமையாக்கப்படும் என்று அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இது குறித்து ஒருமுறை வார்னே பேசும்போது, தான் ஒரு "ஒன்-ஸ்டாப் ஷாப்" போலச் செயல்பட்டதாகவும், அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற முழு அதிகாரம் தன்னிடம் இருந்ததாகவும் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்படி வார்னே நான்கு ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பயணித்தார். இதன் மூலம் அந்த அணியில் அவருக்கு மொத்தம் 3 சதவீத பங்குகள் கிடைத்தன. 2008-ம் ஆண்டு வெறும் 67 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்று உலக அளவில் மிகப்பெரிய மதிப்புள்ள ஒரு அணியாக உயர்ந்து நிற்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுமார் 1.63 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. இந்திய ரூபாயில் கணக்கிட்டுப் பார்த்தால் இதன் மதிப்பு சுமார் 15,290 கோடி ரூபாய் ஆகும். இந்த மாபெரும் தொகையில் ஷேன் வார்னேவுக்குச் சேர வேண்டிய 3 சதவீத பங்கின் மதிப்பு மட்டும் சுமார் 450 முதல் 460 கோடி ரூபாய் வரை வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு வார்னே எடுத்த அந்தச் சரியான முடிவு, இன்று அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும் ஒரு பொக்கிஷமாக மாறியிருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக இந்தத் தருணத்தைக் கொண்டாட ஷேன் வார்னே இன்று நம்மிடம் இல்லை. கடந்த 2022-ம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். இருப்பினும், அவர் அன்று காட்டிய தீர்க்கதரிசனம் அவரது குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, வரும் 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு, வார்னேவின் குடும்பத்தினர் அந்தப் பங்குகளை விற்றுப் பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு இந்தியக் கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் அனுமதி கிடைப்பது மட்டுமே இப்போது பாக்கி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com