
இந்தியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா எடுத்த முடிவை, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். துபாயில் நடந்த ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியில், சல்மானின் இந்த முடிவு உடனடியாகப் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் முற்றிலும் திணறினர்.
பாகிஸ்தானின் மோசமான ஆட்டம்
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக, ஃபர்ஹான் 40 ரன்கள் எடுத்தார். இந்த எளிய இலக்கை இந்திய அணி 15.5 ஓவர்களிலேயே, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக சேஸ் செய்தது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம்
இந்த ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மிகத் தெளிவாகத் தெரிந்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை சிதைத்தனர். அதே சமயம், இந்திய அணியும் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அந்த மூன்று விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சையாம் அயூப் எடுத்தார்.
அக்தரின் ஆவேசம்
துபாய் சர்வதேச மைதானம், இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்ய சல்மான் எடுத்த முடிவு அக்தரை கோபமடையச் செய்தது.
சூர்யகுமார் யாதவ் டாஸ் நேரத்தில் பேசியதைக் குறிப்பிட்டு அக்தர் சாடினார். "அவர்களுக்கு நல்லது நடக்கட்டும். சூர்யகுமார் யாதவ் டாஸின்போதே முழு பிட்ச் அறிக்கையையும் தெளிவாக கொடுத்துவிட்டார். 'பிற்பகுதியில் பனி வரும். அப்போது பந்து பேட்டிற்கு நன்றாக வரும். எங்கள் பேட்டிங் வரிசை ஆழமானது. நாங்கள் சேஸ் செய்யவே விரும்பினோம், எனவே நாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பினோம்' என்று சூர்யகுமார் கூறினார். ஆனால், எங்கள் ஐன்ஸ்டீன் (சல்மான் அலி ஆகா), 'நாங்கள் முதலில் பேட்டிங் செய்வோம்' என்று கூறினார்," என்று அக்தர் தனக்கே உரித்தான நக்கல் நய்யாண்டியுடன் விமர்சித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டாஸ் முடிவுகளுக்கு பெரும்பாலும் பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனாலும், பிட்சின் தன்மையை புரிந்துகொள்ளாமல், பாகிஸ்தான் கேப்டன் எடுத்த இந்த முடிவு, போட்டியில் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.