மீண்டும் மீண்டுமா? சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரிடி! தொடரில் இருந்து வெளியேறிய நம்பர்.1 நட்சத்திர வீரர்! இனி பிளே-ஆஃப் கனவு என்னவாகும்?

6 முதல் 12 வாரங்கள் ஆகும் என்பதால், அவர் இந்தத் தொடரில் இனி விளையாட வாய்ப்பில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Ayush Mhatre
Published on
Updated on
2 min read

ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாக விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான ஆயுஷ் மத்ரே, காயம் காரணமாக இந்த சீசன் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடது காலின் பின்புறத் தசையில் (Hamstring) பலமான காயம் ஏற்பட்டது. இது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்ரே குணமடைய குறைந்தது 6 முதல் 12 வாரங்கள் ஆகும் என்பதால், அவர் இந்தத் தொடரில் இனி விளையாட வாய்ப்பில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 18 வயது இளம் வீரர், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பாகப் பார்க்கப்பட்டார். கடந்த 2025 சீசனில் மாற்று வீரராக அறிமுகமான இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியை உலகக்கோப்பை வெற்றிக்கு வழிநடத்திய கையோடு ஐபிஎல் களத்தில் இறங்கினார். மும்பையைச் சேர்ந்த இந்த இளம் புயல், சிஎஸ்கே ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உருவெடுத்த நிலையில், இந்தத் திடீர் காயம் ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிஎஸ்கே அணி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆயுஷ் மத்ரே எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுகிறார். அவர் முழுமையாகக் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே ஆடிய 6 போட்டிகளிலும் தொடக்க வீரராகக் களம் இறங்கிய மத்ரே, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 177.88 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 201 ரன்களைக் குவித்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இவரே முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ் மத்ரேவுக்குப் பதிலாக இனி யார் தொடக்க வீரராகக் களம் இறங்குவார் என்பது சிஎஸ்கே நிர்வாகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. மத்ரேவைப் போலவே அதிரடியாக ஆடக்கூடிய ஒரு வீரரைத் தேடினால், அணியில் உள்ள உர்வில் படேல் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். இந்திய அளவில் மிகக் குறைந்த பந்துகளில் (28 பந்துகள்) டி20 சதம் அடித்த சாதனையாளர் இவர் என்பதால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மற்றொரு பக்கம், அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கார்த்திக் சர்மா அணியில் இருந்தாலும், இந்த சீசனில் அவர் சரியான ஃபார்மில் இல்லாதது சிஎஸ்கேவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்களில் இருந்து யாரையாவது தேர்வு செய்ய நினைத்தால், அனுபவம் வாய்ந்த அன்மோல்ப்ரீத் சிங் அல்லது முன்னாள் 19 வயதுக்குட்பட்டோர் அணி கேப்டன் யாஷ் துல் ஆகியோரைச் சிஎஸ்கே பரிசீலிக்கலாம். அதேபோல், இளம் வீரரான சுவஸ்திக் சிகாரா போன்றோரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பவர்பிளே ஓவர்களில் அதிரடி ரன் குவிப்பைத் தொடர முடியும். மத்ரே இல்லாதது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பதையும், தோனி தலைமையிலான சிஎஸ்கே இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com