இந்தியா வெற்றி பெற சிறப்பு வழிபாடு...!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. 

2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப் பரீட்சை நடத்தவுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கோயில்களிலும், புனித ஸ்தலங்களிலும் பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக வழிபாடுகள் நடத்தினர். ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், கிரிக்கெட் ரசிகர்கள் அபிஷேகம் செய்து இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர்.

இதேபோல், சேலத்தில் மாவட்ட ஸ்டூடண்ட் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தேசியக் கொடி ஏந்தி மேளதாளத்துடன் பேரணி நடைபெற்றது. அஸ்தம்பட்டி ரவுண்டானாவிலிருந்து தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியர் மாளிகை வரை நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் உள்ள உயர் தர சைவ உணவகத்தில்  இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வகையில் ஊழியர்கள் அனைவரும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து உணவு பரிமாறி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com