

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி தோன்றியுள்ள விளம்பரப்படம் உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை கணித்து சூதாட்டம் நடத்தும் நிறுவனமான Novig-க்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
அதில், சிட்னி ஸ்வீனி மிகக் குறைந்த ஆடையுடன் அல்லது ஆடையே இல்லாமல் தோன்றுகிறார். அவர் பல்வேறு விளையாட்டுப் பொருட்களை வைத்து உடலின் அங்கங்களை மறைத்துக்கொண்டு விளையாடுவது போல அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
விளம்பர வீடியோவுடன் நிர்வாணப் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விளம்பரம் பெண்களின் விளையாட்டை பாலியல்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனைகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை அரியார்ன் டிட்மஸ், இந்த “அபத்தமான” சந்தைப்படுத்தல் பழங்கால விஷயமாகிவிட்டது என நினைத்ததாகக் கூறியுள்ளார்.
அரியார்ன் டிட்மஸ் 4 முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இதைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை வார்த்தைகளால் கூற முடியாது. தங்கள் திறமையை மெருகேற்றுவதற்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த ஒவ்வொரு பெண்ணுக்கும் இது ஒரு அவமானம்.
அது மட்டுமல்ல, குழுவாக ஒன்றிணைதல், நட்பு, அர்ப்பணிப்பு, ஒற்றுமை என விளையாட்டை அதன் உண்மையான அர்த்தத்தில் ரசிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது அவமானமாகும்” எனக் கூறியுள்ளார்.
இந்த விளம்பரத்தை எதிர்ப்பது மட்டுமல்லாமல், பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதன் உண்மையான அர்த்தத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீராங்கனையும், நான்கு முறை ஐரோப்பிய சாம்பியனுமான ஏமி ஹன்ட், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் நான்காவது இடத்தைப் பிடித்த பிறகு, நடிகைக்கு நேரடியாகப் பதிலளித்தார்.
“சிட்னி ஸ்வீனி, விளையாட்டில் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் (what women in sport look like)” என்று ஹன்ட் பிபிசியிடம் கூறினார்.
மேலும் அவர், “மெலிஸா ஜெபர்சன் 21.4 வினாடிகளில் 200 மீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்திருக்கிறார். தசைகள், கடின உழைப்பு, இரத்தம், வியர்வை, கண்ணீர்...
நீங்கள் விளையாட்டில் ஒரு பெண்ணாக இருக்கும்போது, அது அழகாக இருப்பதில்லை; கவர்ச்சியாக இருப்பதில்லை. நிச்சயமாக, அது எப்போதும் செக்ஸியாக இருப்பதில்லை” எனப் பேசியுள்ளார்.
மேலும், பல பெண் வீராங்கனைகள் “This is what a woman in sport looks like” என்று தங்களது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் வெற்றியைப் பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க ஜிம்னாஸ்ட் கிரேசி கிராமர், ஆஸ்திரேலிய ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை லானி பாலிஸ்டர், தடகள ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீ ரிஸ்ஸோ உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு வீராங்கனைகள் முதல் உள்ளூர் வீராங்கனைகள் வரை, விளையாட்டில் பெண்களின் திறமையையும் உழைப்பையும் முன்னிறுத்தி பதிவிட்டு வருகின்றனர்.
சிட்னி ஸ்வீனியின் விளம்பரம் சர்ச்சையாவது இது முதன்முறை அல்ல. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜீன்ஸ் ஆடை நிறுவனத்துக்காக அவர் நடித்த விளம்பரத்தில், ஜீன்ஸ் துணியையும் மனித ஜீன்களையும் ஒப்பிட்டு விளம்பரப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர், அந்த விளம்பரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும், தான் இனப் பாகுபாட்டுக்கு எதிரானவர் என்றும் சிட்னி ஸ்வீனி கூறியிருந்தார்.
ஆனால், இந்த முறை முற்காலத்தில் விளையாட்டு வீராங்கனைகளாக இருந்த பெண்கள் நிர்வாணமாக ESPN போன்ற இதழ்களுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்