விறுவிறுப்பான இறுதி கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்...

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான இறுதி கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்...
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்தது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால், 2-வது இன்னிங்சில்  466 ரன்கள் குவித்தது. இதையடுத்து,  இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 127 ரன்களும், புஜாரா 61 ரன்களும் விளாசினர்.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்ட இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  இங்கிலாந்து வீரர்கள் மிகவும் கவனமுடனும் ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து இந்திய பந்து வீச்சாளர்களை சோதித்தனர். 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது.  இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில்  வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவைப்படுகிறது.  இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், வெற்றிக்கு இரு அணிகளும் முனைப்புடன் காணப்படும் என்பதால், ஓவல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com